சவாலை சமாளிப்பாரா 'குரு' காம்பிர்... * மாற்றத்தை நோக்கி இந்திய அணி

புதுடில்லி: பயிற்சியாளர் கவுதம் காம்பிருக்கு அடுத்த இரண்டு ஆண்டு சவாலானது. இங்கிலாந்துடன் டெஸ்ட், 'டி-20' உலக கோப்பை, 50 ஓவர் உலக கோப்பை என கடின தொடர்கள் காத்திருக்கின்றன.
இந்திய அணி 'டி-20' உலக கோப்பை (2024, ஜூன்) வென்றதும் பயிற்சியாளர் பணிக்கு விடைகொடுத்தார் டிராவிட். புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற காம்பிர், கடந்த 8 மாதங்களில் ஏற்ற, இறக்கங்களை சந்தித்தார். சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா இழந்தது. ஆஸ்திரேலியாவிலும் டெஸ்டில் சொதப்பியது. 6 டெஸ்ட் போட்டிகளை தோற்ற நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா களமிறங்கியது.
துணிச்சல் முடிவு
தோல்விகளை கண்டு கலங்காத காம்பிர், துணிச்சலான முடிவுகளை எடுத்தார். பும்ரா இல்லாத நிலையில் 4 'ஸ்பின்னர்'களை பயன்படுத்தினார். பேட்டிங் வரிசையில் அக்சர் படேலை 5வது, ராகுலை 6வது இடத்தில் களமிறக்கினார். இவரது இந்த முயற்சிகள் வெற்றி பெற, இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது. தற்போது 'சூப்பர்' பயிற்சியாளராக அடையாளம் காட்டியுள்ளார். இவருக்கு மூன்று சவால்கள் காத்திருக்கின்றன.
* முதலில் இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் தொடர் (2025, ஜூன்-ஆக.) நடக்க உள்ளது. டெஸ்ட் தொடரில் ரோகித், ஜெய்ஸ்வால், ராகுல் என 'டாப்-3' வீரர்கள் இடம் பெற்றால், சுப்மன் கில்லை சேர்ப்பது கடினம். 'மிடில் ஆர்டரில்' கோலி, ஸ்ரேயாஸ் இடம் பெறுவரா அல்லது கருண் நாயர் சேர்க்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஷமி, சிராஜ் உடன் காயத்தில் இருந்து குணமடைந்த பும்ராவையும் சேர்க்க நேரிடும். 'சுழலில்' அஷ்வின் இல்லாதது பெரும் குறையாக இருக்கும்.
* அடுத்து 2026ல் (பிப்-மார்ச்) இந்தியா, இலங்கையில் 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்க உள்ளது. சூர்யகுமார் தலைமையில், கோப்பையை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்கும். 'டி-20' போட்டியில் ரோகித் சர்மா, கோலி, ரவிந்திர ஜடேஜா ஓய்வு பெற்றது பாதிப்பை ஏற்படுத்தலாம். இருப்பினும் அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி, ஷிவம் துபே, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி போன்ற அடுத்த தலைமுறை வீரர்கள் உள்ளனர். அனுபவ ஜெய்ஸ்வால், சாம்சன், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல் இருப்பதால், காம்பிருக்கு கவலை இல்லை.
* தென் ஆப்ரிக்காவில் 2027ல் நடக்க உலக கோப்பை தொடர்(50 ஓவர்) அதிக சவாலானது. இத்தொடருக்கு முன் 27 ஒருநாள் போட்டிகளில் தான் இந்தியா பங்கேற்க உள்ளது. அதற்குள் சரியான அணியை காம்பிர் கண்டறிய வேண்டும். ஒருநாள் போட்டிகளில் ரோகித், கோலி பங்கேற்பது உறுதியில்லாமல் உள்ளது. ஒருநாள் அரங்கில் சுப்மன் கில் அசத்தலான வீரர். ஹர்திக் பாண்ட்யா தலைமை பண்பில் சிறந்தவர். இவர்களில் யாரிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைப்பது என்பது 'மில்லியன் டாலர்' கேள்வி. காம்பிரை பொறுத்தவரை எதையும் நுணுக்கமாக சிந்திப்பார். கிரிக்கெட் விஷயத்தில் இவரது மூளை வேகமாக செயல்படும். சரியான வியூகங்களை வகுப்பார். சாம்பியன்ஸ் டிராபியை வென்றது போல, வரும் தொடர்களிலும் இந்திய அணிக்கு வெற்றி தேடித் தருவார்.
தேசம் முக்கியம்: ரிஷாப்
இந்திய வீரர் ரிஷாப் பன்ட் கூறுகையில்,''இளம் பருவத்தில் இந்தியாவுக்காக விளையாடுவதே எனது கனவாக இருந்தது. ஐ.பி.எல்., பற்றி சிந்திக்க கூட இல்லை. தற்போது ஐ.பி.எல்., மீது மட்டும் அதிக கவனம் செலுத்துகின்றனர். இதுவும் சிறந்த வாய்ப்பு தான். ஆனால், தேசத்திற்காக விளையாடுவதே ஒவ்வொருவரின் இலக்காக இருக்க வேண்டும். எனக்கு கடவுளின் கருணை இருந்ததால், 18 வயதிலேயே இந்திய அணிக்காக அறிமுகமானேன்,''என்றார்.
தாயகம் திரும்பிய
இந்திய சாம்பியன்கள்
சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய வீரர்கள் துபாயில் இருந்து தாயகம் திரும்பினர். கேப்டன் ரோகித் சர்மா சொந்த ஊரான மும்பைக்கு பறந்தார். டில்லி வந்திறங்கினர் பயிற்சியாளர் காம்பிர், 'வேகப்புயல்' ஹரஷித் ராணா.
பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,''பெரும்பாலான வீரர்கள் இந்தியா திரும்பி விட்டனர். சிலர் மட்டும் இன்னும் இரண்டு நாள் துபாயில் தங்க உள்ளனர். அனைவரும் ஐ.பி.எல்., தொடரில் (மார்ச் 22-மே 25) தங்களது அணிகளுக்காக களமிறங்க உள்ளனர். இடையில் ஒரு வாரம் மட்டுமே 'பிரேக்' இருப்பதால், வீரர்கள் ஓய்வை விரும்புகின்றனர். இதனால் சாம்பியன்ஸ் டிராபி வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்யவில்லை,''என்றார்.
மேலும்
-
யார் அந்த சார்: போலீஸ் குற்றப்பத்திரிகையில் புதிய தகவல்கள்!
-
காந்தி பஜாரின் அடையாளம் வித்யாத்ரி பவன்: மசால் தோசை சாப்பிட முன்பதிவு அவசியம்
-
ரூ.7 லட்சம் மாத வருமானம் 20 பேருக்கு வேலை - அசத்துகிறார் இன்ஜினியர் பூக்கள் வளர்ப்பில் மாதம்
-
ஆதரவற்ற குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் மஹாதேவி
-
இருமொழிக் கொள்கையைத் தான் தமிழகம் விரும்புகிறது; தர்மேந்திர பிரதானுக்கு அமைச்சர் மகேஸ் பதில்
-
அமெரிக்கா என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்: பேச்சுவார்த்தைக்கு வர ஈரான் மறுப்பு