புதுச்சேரியை மாநிலமாக உருவாக்குவதே இலக்கு; சட்டசபையில் கவர்னர் கைலாஷ்நாதன் உறுதி

புதுச்சேரி : புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை, பொருளாதார வளர்ச்சியுடன் மாநிலமாக உருவாக்குவதே இலக்கு என, பட்ஜெட் கூட்டத்தொடரை துவக்கி வைத்து, கவர்னர் கைலாஷ்நாதன் பேசினார்.
புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. காலை 9:26 மணிக்கு கவர்னர் கைலாஷ்நாதன் சட்டசபைக்கு வந்தார். அவருக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். பின், சபாநாயகர் செல்வம் பூங்கொத்து கொடுத்து வரவேற்று, சபை மைய மண்டபத்திற்கு அழைத்து சென்றார். அங்கு சபாநாயகர் இருக்கையில் கவர்னர் அமர்ந்தார். 9:30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் சபை நிகழ்வுகள் துவங்கியது. தொடர்ந்து கவர்னர் கைலாஷ்நாதன் தமிழில் உரையாற்றி, கூட்டத்தொடரை துவக்கி வைத்தார்.
அவரது உரையின் முக்கிய அம்சங்கள்:
ஏ.எப்.டி., உதவி திட்டம் மற்றும் நபார்டு வங்கிகள் மூலம் தற்போது நடைபெறும் பணிகளுக்கு, ரூ.659 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் ரூ. 8,467 கோடிக்கான புதிய பணிகள் மேற்கொள்ளப்படும். பிரதமர் ஏக்தா மால் ஏற்படுத்த ரூ.104 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
புதுச்சேரி விமான நிலைய ஓடுதளம் 3 ஆயிரம் மீட்டராக விரிவுபடுத்தவும், ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்ய ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.620 கோடிக்கான திட்ட பணிகளை பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. அதில், ரூ.175 கோடிக்கான பணிகள் முடிவடைந்துள்ளன. ரூ. 445 கோடிக்கு பணிகள் நடக்க உள்ளது.
புதிய ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் விரைவில் திறக்கப்படும். ரூ.99 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் மக்கள் சேவைக்கு அர்ப்பணிக்கப்படும்.
புதுச்சேரி அரசு எடுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையால், 2020-21ம் ஆண்டில் ரூ.8,418.96 கோடியில் இருந்த மாநில வருவாய், 2023-24ம் ஆண்டில் ரூ.11,311.92 கோடியாக உயர்ந்து 34.36 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.
நமது பொருளாதாரத்தின் அளவு கடந்த 5 ஆண்டில் 46.44 சதவிதம் அதிகரித்து மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டு சராசரி வளர்ச்சி வீதமான 9.56 சதவீதத்தை எட்டியுள்ளது.
2020-21ம் ஆண்டில் மைனஸ் 2.21 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி விகிதம், 2024-25ம் ஆண்டில் 8.81 சதவீதத்தை எட்டியுள்ளது.
சுதேசி தர்ஷன் 2.0 திட்டத்தின் கீழ் காரைக்கால் கடற்கரை, நீர்முனை அனுபவம் அடையாளம் காணப்பட்டு மத்திய அரசு பாரம்பரிய நகர வளர்ச்சிக்கு ரூ.45.29 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆன்மிக யாத்திரை மறுவாழ்வு, பாரம்பரிய பெருக்க திட்டத்தின்கீழ் திருநள்ளாறு சுற்றுலா பயணிகள் வசதிக்கும், ஆன்மிக பூங்கா அமைக்கவும் மத்திய அரசு ரூ.25.94 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
கோவில்களின் மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.111.32 கோடியில் திட்ட அறிக்கை மத்திய சுற்றுலா அமைச்சகத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி பெற்ற பாரதம் 2047 என்ற முன்னோக்கு திட்டத்தின் அடிப்படை கொள்கையை ஒருங்கிணைத்து 'பெஸ்ட் புதுச்சேரி' என்ற பிரதமரின் தொலைநோக்கு பார்வையை முழுமையாக செயல்படுத்த அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
புதுச்சேரியை தற்சார்பு, வளர்ச்சி, ஒருங்கிணைந்த பொருளாதார வளர்ச்சியுடன் கூடிய மாநிலமாக உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் தொலைநோக்கு பார்வை அடிப்படையில் மாநில மக்களின், இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதுச்சேரியை வணிகம், கல்வி, ஆன்மிகம், சுற்றுலா மையமாக 'பெஸ்ட் புதுச்சேரி'யாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு கவர்னர் குறிப்பிட்டார்.
3 லட்சமாக அதிகரிப்பு: புதுச்சேரியில் ஆண்டுதோறும் தனிநபர் வருமானம் அதிகரித்து வருகிறது. நேற்றைய பட்ஜெட்டிலும் புதுச்சேரியில் தனிநபர் வருமானம் 3 லட்சத்தை தாண்டியது என தெரிவிக்கப்பட்டது. கவர்னர் கைலாஷ்நாதன் பேசுகையில், தற்போதைய நிலையில் புதுச்சேரியின் தனி நபர் வருமானம் 5.33 சதவீதம் அதிகரித்து, கடந்த ஆண்டின் 2,87,354 ரூபாயில் இருந்து 3,02,680 ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு தனி நபர்களிடம் கூடுதலாக ரூ. 15 ஆயிரம் இருப்பதை வருவாய் தரவுகள் தெரிவிக்கின்றன என்றார்.
மேலும்
-
சவாலை சமாளிப்பாரா 'குரு' காம்பிர்... * மாற்றத்தை நோக்கி இந்திய அணி
-
இரண்டு தங்கம் வென்றார் ரமேஷ் * உலக பாரா கிராண்ட் பிரிக்ஸ் தடகளத்தில்
-
மீண்டும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு * தடையை நீக்கியது மத்திய அரசு
-
போபண்ணா ஜோடி ஏமாற்றம்
-
150 வது ஆண்டு டெஸ்ட் * இங்கிலாந்து-ஆஸி., மோதல்
-
தீப்தி சர்மா 'நம்பர்-5' * ஐ.சி.சி., தரவரிசையில்...