'லேப் டெக்னீசியன்' நியமனத்திற்கு தேர்வு

மதுரை : மருத்துவக் கல்லுாரி, மருத்துவமனைகளில் 'லேப் டெக்னீசியன்' பணியிடத்திற்கு எழுத்து, செயல்முறை தேர்வு நடத்த வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண்ணை கணக்கிடக்கூடாது என அகில இந்திய மருத்துவ ஆய்வக நுட்புனர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

பிளஸ் 2 முடித்தபின் 2 ஆண்டு கால லேப் டெக்னீசியன் டிப்ளமோ (டி.எம்.எல்.டி.,) முடித்தவர்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கல்வி வாரியம் மூலம் நேரடியாக வேலைக்கு தேர்வாகின்றனர். மற்ற பணியிடங்களைப் போல இதற்கும் தேர்வு வைக்க வேண்டும் என சங்க மாநிலத் தலைவர் மரியதாஸ் தெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது:

பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண்ணில் 10 சதவீதம், பிளஸ் 2வில் 20 சதவீதம், டிப்ளமோவில் 30 சதவீதம் என 60 சதவீத மதிப்பெண் அடிப்படையில் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்படுகின்றனர். பத்தாண்டுகளுக்கு முன் படித்தவர்களுக்கு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. இப்போது உள்ளவர்கள் நிறைய மதிப்பெண் பெறுகின்றனர். அதுமட்டுமின்றி கொரோனா தொற்று காலத்தில் பொதுத்தேர்வு, டிப்ளமோ தேர்வெழுதிய மாணவர்களுக்கு நிறைய மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. அவர்கள் எல்லாம் 'கட்ஆப்' மதிப்பெண் அதிகமாக பெற்று, ஏற்கனவே டிப்ளமோ முடித்து வேலைக்காக காத்திருக்கும் சீனியர்களை முந்திச்சென்று வேலை பெறுகின்றனர். இந்த நடைமுறையை மாற்றி டிப்ளமோ மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டு எழுத்து, செயல்முறை தேர்வு நடத்தி பணியிடத்தை நிரப்ப வேண்டும்.

சீனியர்களை நியமிக்க வேண்டும்



கிரேடு 2 லேப் டெக்னீசியன்கள் பணியிடத்திற்கான கவுன்சிலிங் தற்போது முடிந்துள்ளது. ஏற்கனவே ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஐந்தாண்டுக்கு மேல் பணியில் இருப்பவர்களை சீனியாரிட்டி அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லுாரி, மருத்துவமனைகளுக்கு மாற்ற வேண்டும். அரசு மருத்துவக் கல்லுாரிகளில் சேரும் டிப்ளமோ லேப் டெக்னீசியன், எம்.பி.பி.எஸ்., மற்றும் பார்மசி படிக்கும் மாணவர்களுக்கு செய்முறை பயிற்சியை கிரேடு 2 லேப் டெக்னீசியன்கள் அளிக்க முடியும். புதிதாக மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளில் நியமிக்கப்படுபவர்களால் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க முடியாது.

பிற துறைகளில் சீருடை அலவன்ஸ் வழங்கப்படுகிறது. நாங்களும் வெள்ளைகோட் அணிந்து தான் பணி செய்கிறோம். எங்களுக்கும் சீருடை அலவன்ஸ் தரவேண்டும் என்றார்.

Advertisement