போலீஸ் விசாரணையில் மரணம்; சி.பி.ஐ.,க்கு மாற்ற கோரிய வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை : மதுரை அவனியாபுரம் போலீஸ் விசாரணையில் ஒருவர் மரணமடைந்தது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரியதில், கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அந்நீதிமன்றம் விசாரணையை விரைவுபடுத்த உத்தரவிட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை பைசல் செய்தது.
மதுரை முத்துகருப்பன் ஏற்கனவே தாக்கல் செய்த மனு: எனது மகன் பாலமுருகன். டிரைவராக இருந்தார். அவரை ஒரு கடத்தல் வழக்கு தொடர்பாக மதுரை அவனியாபுரம் போலீசார் 2019 ல் சட்டவிரோதமாக காவலில் வைத்து தாக்கினர். காயமடைந்த பாலமுருகன் மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தார். அவனியாபுரம் போலீசில் சம்பவத்தின்போது பதிவான சி.சி.டி.வி.,கேமரா பதிவுகளை பாதுகாக்கவும், சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். சி.பி.ஐ.,விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனு செய்தார்.
பின் மனுதாரர் தரப்பில் வாபஸ் பெற்றதால், தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இது தொடர்பாக உயர்நீதிமன்றக் கிளை பதிவாளருக்கு (நீதித்துறை) ஒரு கடிதம் வந்தது. அதில்,'சம்பந்தப்பட்ட போலீசாரின் மிரட்டலால் மனுதாரர் வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். இதனால் வழக்கு விசாரணை சுதந்திரமாக நடக்க வாய்ப்பில்லை. தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனடிப்படையில் பதிவாளர்,'சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிய வேண்டும். அதை சி.பி.ஐ.,விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தார். இதை தானாக முன்வந்து 2020 ல் இரு நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு எடுத்தது.
நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு தரப்பு: மதுரை மாவட்ட 6வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்காக விசாரணை ஏப்.,9 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: இவ்வழக்கில் மேலும் உத்தரவு பிறப்பிக்க வேண்டியதில்லை. மதுரை கீழமை நீதிமன்றம் விசாரணையை விரைவுபடுத்தி பைசல் செய்ய வேண்டும். இவ்வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.
மேலும்
-
பேரிடர் பாதுகாப்பு விழிப்புணர்வு
-
குப்பை சேகரிக்கும் பணி; பின்தங்கிய திருப்பூர்!
-
நெல் விதைகள் பராமரிப்பு; வேளாண் துறை அறிவுரை
-
பாலியல் தண்டனை பெற்ற ஆசிரியர்கள் 'டிஸ்மிஸ்'; கோவையில் அனைத்து தரப்பினரும் வரவேற்பு
-
அசாமில் 30 கோடி ரூபாய் போதை மாத்திரை பறிமுதல்
-
கல்லுாரி மாணவி கடத்தல்; தாய், மகன், 3 பேர் கைது