மகளிர் முன்னேற்றத்திற்கு தனி துறை; தமிழக அரசுக்கு ஐகோர்ட் யோசனை
சென்னை : 'பெண்களின் முன்னேற்றத்துக்காக, சமூக நலத்துறையை பிரித்து, மகளிர் மேம்பாட்டு துறை என்ற தனித்துறையை ஏன் உருவாக்கக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மருத்துவ கல்லுரியில் பணியாற்றிய பெண் டாக்டருக்கு, பாலியல் தொல்லை அளித்த நபருக்கு ஆதரவாக, அந்த கல்லுாரி முதல்வர் செயல்படுவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, மத்திய, மாநில அரசுகளுக்கு பல உத்தரவுகளை பிறப்பித்தார். இந்த உத்தரவுகள் அமல்படுத்தப்படுகின்றனவா என்பதையும் கண்காணித்து வருகிறார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, பணி செய்யும் இடத்தில் பாலியல் தொல்லை தடுப்பு சட்டத்தின் கீழ், போலீசார் பதிவு செய்த வழக்குகள் பற்றிய விபரங்களை அறிக்கையாக தாக்கல் செய்தார். பின், அவர் கூறியதாவது:
இந்த வழக்குகளின் புலன் விசாரணையை விரைந்து முடித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என, விசாரணை அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.
பெண்கள் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில், இதுவரை, 36,௦௦௦ உள்புகார் கமிட்டிகள் அமைப்பட்டுள்ளன. இதற்கென உருவாக்கப்பட்ட இணையதளத்தில், 746 உள்புகார் கமிட்டிகளின் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து கமிட்டிகளின் விபரங்களும், விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, நீதிபதி ஆர்.என். மஞ்சுளா கூறியதாவது:
அரசு துறைகளில் பணி நியமனம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு வழங்கும் போதும், போட்டித்தேர்வுகள் நடத்தும் போதும், பாலியல் உணர்திறன் பாடத்தில் தேர்ச்சி பெறுவதை கட்டாயமாக்கலாம்.
அதாவது, கீழ்நிலை பணி முதல் உயர் நிர்வாக பணி வரையில் உள்ள அனைவருக்கும், பெண்மையை வெறுக்கும் போக்கை மாற்றும் பொருட்டு, பாலியல் உணர்திறன் பாடத்தேர்ச்சி கட்டாயம் என, பணியாளர்கள் விதிகளில் திருத்தம் கொண்டு வரலாம்.
பெண்கள் முன்னேற்றத்துக்காக, சமூக நலத்துறையை பிரித்து, பெண்கள் மேம்பாட்டு துறை என, தனித்துறையை மாநில அரசு ஏன் உருவாக்கக் கூடாது?
இவ்வாறு அவர் கூறினார்.
அதற்கு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், 'இது மாநில அரசின் கொள்கை சார்ந்த விவகாரம். இப்போது இந்த உயர் நீதிமன்றம் செய்யும் பரிந்துரைகளில் எவையெல்லாம் அமல்படுத்த முடியும் என, அரசு ஆய்வு செய்து முடிவு செய்யும்.
'பெண்கள் முன்னேற்றத்துக்கும், பாலியல் தொல்லையில் இருந்து அவர்களை பாதுகாத்து, அச்சமின்றி தற்சார்புடன் வாழவும், மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது' என்றார்.
அதை ஏற்ற நீதிபதி, 'பெண்கள் மேம்பாட்டு துறையை உருவாக்க, சம்பந்தப்பட்ட துறை செயலரிடம், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கலந்து ஆலோசனை செய்ய வேண்டும்' என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல், 15க்கு தள்ளிவைத்தார்.
மேலும்
-
சட்ட விரோத ஊடுருவல்; டில்லியில் வங்கதேசத்தினர் 20 பேர் கைது
-
பயிற்சி டாக்டர்கள் அறையில் கஞ்சா: 3 பேர் கைது
-
யார் அந்த சார்: போலீஸ் குற்றப்பத்திரிகையில் புதிய தகவல்கள்!
-
காந்தி பஜாரின் அடையாளம் வித்யாத்ரி பவன்: மசால் தோசை சாப்பிட முன்பதிவு அவசியம்
-
ரூ.7 லட்சம் மாத வருமானம் 20 பேருக்கு வேலை - அசத்துகிறார் இன்ஜினியர் பூக்கள் வளர்ப்பில் மாதம்
-
ஆதரவற்ற குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் மஹாதேவி