போடிமெட்டு மலைப்பாதையில் சாரல் மழையுடன் பனிமூட்டம்; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

போடி; கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் போடி - மூணாறு செல்லும் போடிமெட்டு மலைப் பாதையில் சாரல் மழையுடன் பனிமூட்டம் நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தேனியில் - மூணாறு செல்லும் ரோட்டில் தமிழக, கேரளாவை இணைக்கும் வழித்தடத்தில் அமைந்து உள்ளது போடிமெட்டு. தேனியில் இருந்து 22 கி.மீ., சமவெளியில் சென்றால் போடி முந்தல் என்ற இடத்தை அடையலாம். இங்கிருந்து 17 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப் பாதையை 22 கி.மீ., கடந்து சென்றால் தமிழகத்தின் எல்லை பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4644 அடி உயரத்தில் போடிமெட்டு மலைப்பகுதி அமைந்து உள்ளது.

போடி, கேரளா பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் வானிலை சட்டென மாறியதால் போடி பகுதி, போடிமெட்டு பகுதியில் சாரல் மழை பெய்தது.

போடிமெட்டு, பூப்பாறை செல்லும் ரோட்டில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத நிலையில் பனிமூட்டம் நிலவியது. பலர் முகப்பு லைட் போடாமல் ஓட்டி செல்வதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். சாரல் மழையுடன் பனி மூட்டம் நிலவியதால் தோட்ட பணிகள் மேற்கொள்ள தொழிலாளர்கள் சிரமம் அடைந்தனர். சாரல் மழை, பனிமூட்டத்தால் வளைவான மலைப் பாதையில் வாகன விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்க சோலார் மூலம் 'முகப்பு லைட்' வசதி அமைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சுற்றுலா பயணிகள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Advertisement