காதல் திருமணத்துக்கு பின் மாயம்மகளை காட்டும்படி பெற்றோர் கதறல்



காதல் திருமணத்துக்கு பின் மாயம்மகளை காட்டும்படி பெற்றோர் கதறல்

சேலம்:சேலம் மாவட்டம் வாழப்பாடி, வெள்ளாளகுண்டத்தை சேர்ந்தவர் விக்னேஷ் கண்ணன், 27. பி.இ., பட்டதாரி. பனமரத்துப்பட்டி, திப்பம்பட்டியை சேர்ந்தவர் ஸ்ரீநிதி, 19. இவர்கள் காதலித்த நிலையில், வீட்டை விட்டு வெளியேறி நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டனர். பின் வாழப்பாடி போலீசில் தஞ்சமடைந்த ஜோடி மாயமானது.
இந்நிலையில் விக்னேஷ்கண்ணனின் உறவினர்கள் அழைப்பை ஏற்று, ஸ்ரீநிதியின் பெற்றோர் ஸ்ரீதர், சகுந்தலா உள்ளிட்ட உறவினர்கள், வெள்ளாளகுண்டத்துக்கு சென்று வெகுநேரம் காத்திருந்தும், அங்கு ஜோடி வராததால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
நேற்று கலெக்டர் அலுவலகம் வந்த பெற்றோர், 'மகள் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. உயிரோடு இருக்கிறாரா என்ற சந்தேகம் உள்ளது. மகளின் காதலை ஏற்கிறோம். ஒருமுறை அவரை கண்ணில் காட்டினால் போதும்' என, கதறி அழுதனர்.
தொடர்ந்து, 'மகள் காதலை அறிந்து அவரை ஈரோடு, அறச்சநல்லுாரில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்தோம். இதை அறிந்த விக்னேஷ்கண்ணன், மகளை அழைத்துச்சென்று திருமணம் செய்து கொண்டதால், இனி அவர்களை பிரிக்க உடன்பாடில்லை. விரும்பியபடி வாழட்டும். ஆனால் எங்களுக்கு மகளை காட்ட வேண்டும். விக்னேஷ் கண்ணனின் பெற்றோர், உறவினர்களை சந்தித்து பேசி சுமுக முடிவு எடுத்துள்ளோம்' என்றனர். இது தொடர்பாக கொண்டலாம்பட்டி மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement