ஸ்ரீவைகுண்டம் பள்ளியில் ஜாதி அடையாளங்களை அழித்த கலெக்டர், எஸ்.பி.

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டத்தில்பள்ளி மாணவர் வெட்டப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து கலெக்டர், எஸ்.பி. ஸ்ரீவைகுண்டம் பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிளஸ் 1 மாணவர் தேவேந்திரராஜா சிறார்களால் அரிவாளால் வெட்டப்பட்டார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த வழக்கை எஸ்.சி.எஸ்.டி.,ஆணையம் தாமாக விசாரணைக்குஎடுத்துள்ளது. கலெக்டர், எஸ்.பி., ஏப்.,2க்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், கலெக்டர் இளம்பகவத், எஸ்.பி., ஆல்பர்ட்ஜான் ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று வந்தனர். கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.

மாணவர்களுக்கு ஜாதி பாகுபாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் குற்ற வழக்குகளில் ஈடுபட்டால், கல்வி, வேலைவாய்ப்பில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விளக்கினார்.

கலெக்டர் இளம்பகவத் பேசுகையில், இந்தப் பள்ளியின் ஆண்டு விழாவிற்கு வந்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். இத்தகைய சம்பவத்தின் போது வந்திருப்பது வருத்தமடைய செய்கிறது. இந்த பள்ளியில் தான் தகைசால் தலைவர் விருது பெற்ற நல்லகண்ணு, பல்வேறு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் படித்துள்ளனர். பள்ளி வளாகத்தில் ஜாதி அடையாளங்களை எழுதக்கூடாது, ஜாதி பேச்சுக்களும் இருக்கக்கூடாது என அறிவுறுத்தினார்.

மேலும், பள்ளி வளாகம், வகுப்பறைகளில் ஜாதியை குறிக்கும் எழுத்துக்களை அழிக்க மாணவர்களே முன்னெடுப்பாக பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதன்படி, பெயிண்ட் டப்பாக்களை கொடுத்து, மாணவர்களையே அந்த எழுத்துக்களை நீக்கச் செய்தார்.

ஜாதி வெறியால் மாணவர்கள்பாதிக்கப்படக்கூடாது; பள்ளி மட்டுமல்ல, ஆசிரியர்களும் இதில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று கலெக்டர், எஸ்.பி., உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Advertisement