போலி செயலி பயன்படுத்தி 39 லட்சம் ரூபாய் மோசடி

கோவை; ஆன்லைன் டிரேடிங்கில் அதிக லாபம் தருவதாக கூறி, போலி செயலி மூலம் தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ. 39 லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

கோவை, சிங்காநல்லுாரை சேர்ந்த ஸ்ரீகாந்த், 43; தனியார் நிறுவனத்தில் சீனியர் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த ஜன., மாதம் இவரது 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் விளம்பரம் ஒன்றை பார்த்தார். அதில் ஆன்லைன் டிரேடிங் செய்து, அதிக லாபம் ஈட்ட முடியும் என குறிப்பிட்டிருந்தது.

விளம்பரத்தின் இறுதியில் 'லிங்க்' கொடுக்கப்பட்டிருந்தது. ஸ்ரீகாந்த் அந்த 'லிங்க்'ஐ கிளிக் செய்தவுடன், அவரது மொபைல் எண், ஒரு வாட்ஸ் அப் குழுவில் இணைக்கப்பட்டது.

தொடர்ந்து, அந்த வாட்ஸ் அப் குழுவில், முன்னணி நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது, விற்பனை செய்வது குறித்த விவரங்களை, பகிர்ந்து வந்துள்ளனர்.

வாட்ஸ் அப் குழுவில் உள்ள நபர்கள் டிரேடிங் மூலம், அதிக பணம் சம்பாதித்து வருவதாக காண்பித்துள்ளனர்.

அந்த குழுவை சேர்ந்த ஒருவர் ஸ்ரீகாந்தை, 'வாட்ஸ் அப்'ல் அழைத்து பேசினார். அப்போது, அவர் கூறும் செயலி மூலம் முதலீடு செய்து, டிரேடிங் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என தெரிவித்தார். ஸ்ரீகாந்த் அந்த செயலியை பதிவிறக்கம் செய்தார்.

பின்னர் மர்ம நபர் அனுப்பிய பல்வேறு வங்கி கணக்குகளுக்கு, பல்வேறு தவணைகளில், ஸ்ரீகாந்த் ரூ.39.66 லட்சம் அனுப்பினார். அந்த பணம் செயலியில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஸ்ரீகாந்த், அந்த செயலியில் டிரேடிங் செய்து வந்தார். அதில் அவரின் முதலீடு, லாபம் என ரூ. 50 லட்சத்துக்கும் மேல் காட்டியுள்ளது.

இதையடுத்து, ஸ்ரீகாந்த் பணத்தை எடுக்க திட்டமிட்டார். ஆனால் அவரால் பணத்தை தனது வங்கிக்கு மாற்ற முடியவில்லை. அப்போதுதான் அது போலியான செயலி என்பது, ஸ்ரீகாந்துக்கு தெரியவந்துள்ளது.

ஸ்ரீகாந்த், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement