திருக்காஞ்சி தீர்த்தவாரி திருவிழா

வில்லியனுார்: திருக்காஞ்சியில் நடந்த மாசிமக தீர்த்தவாரியில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து எழுந்தருளிய 55 சுவாமிகளை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

வில்லியனூர் அருகே பிரசித்தி பெற்ற திருக்காஞ்சி கெங்கைவராக நதீஸ்வரர் கோயில் உள்ளது. காசியிலும் வீசம் பெற்ற இந்த கோவிலில் மாசி மாத தீர்த்தவாரி திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 6ம் தேதி மாலை பாரிவேட்டையும், 8ம் தேதி யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா, 10ம் தேதி இரவு திருக்கல்யாண உற்வசமும், 11ம் தேதி தேர் திருவிழா நடந்தது.

முக்கிய நிகழ்வான மாசி மாத தீர்த்தவாரி நேற்று நடந்தது. சங்கராபரணி ஆற்றங்கரைக்கு சென்ற சுவாமிக்கு காலை 10:00 மணிக்கு தீர்த்தவாரி நடந்தது. உறுவையாறு, அரியூர், கோர்காடு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், சாத்தமங்கலம், மேல் சாத்தமங்கலம், ஏம்பலம் உள்ளிட்ட 55 கிராமங்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் தீர்த்தவாரி உற்சவத்தில் பங்கேற்றன. ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர். சங்கராபரணி ஆற்றின் கரையில் அதிகாலை முதல் ஏராளமானோர் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர்.

காசி விஸ்வநாதர் கோவில்



ஒதியம்பட்டு காசிவிஸ்வநாதர் கோவில் மாசிமக தீர்த்தவாரி கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 6ம் தேதி முத்துபல்லக்கு, 10 ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. முக்கிய நிகழ்வாக சங்கராபரணி ஆறு வடபுறத்தில் அதிகார நந்தி காமாட்சியுடன் மாசி மக தீர்த்தவாரி நடந்தது.

ஒதியம்பட்டு, வில்லியனுார், மேலண்ட வீதி மாரியம்மன், கோட்டைமேடு, கணுவாப்பேட்டை, அரும்பார்த்தபுரம், கூடப்பாக்கம், அகரம், வி.மணவெளி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமத்தில் இருந்து சுவாமிகள் தீர்த்தவாரியில் எழுந்தருளினர்.

Advertisement