இயற்கை இடுபொருள் தயாரிப்பு பயிற்சி

பாகூர்: இயற்கை விவசாய இடு பொருட்கள் தயாரிப்பு மற்றும் பயன்பாடு குறித்த பண்ணை பள்ளி குடியிருப்புபாளையம் கிராமத்தில் நடந்தது.

வேளாண் துறை பாகூர் பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையத்தின், ஆத்மா திட்டம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, பாகூர் கோட்ட இணை வேளாண் இயக்குநர் (பொறுப்பு) குமாரவேலு தலைமை தாங்கினார். வேளாண் அலுவலர் பரமநாதன், காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய வல்லுனர் பிரபு, முன்னோடி விவசாயி கூனிச்சம்பட்டு வீரப்பன், ஆத்மா மேலாளர் ஆறுமுகம் ஆகியோர், ஜீவாமிர்த கரைசல், முட்டை அமினோ அமில கரைசல், பஞ்சகவ்யா மற்றும் திறன்மிகு நுண்ணுயிர் கரைசல் தயாரிப்பு முறை பற்றி செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளித்தனர்.

அரங்கனூர் கிராமத்தில் இயற்கை முறையில் தென்னையில் ஊடுபயிராக மஞ்சள் பயிரிட்டு, ஒரு செடியில் இரண்டு முதல் மூன்று கிலோ வரை அதிக விளைச்சல் எடுத்த விவசாயி திருஞானமூர்த்தியை, வேளாண் அதிகாரிகள் பாராட்டினர். இயற்கை விவசாயி தங்கவேல் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். பாகூர் மற்றும் சேலியமேடு பகுதியை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். உதவி வேளாண் அலுவலர் பாஸ்கரன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர்கள் முத்துகுமரன், செயல் விளக்க உதவியாளர்கள் குணசீலன், பிரபா சங்கர் செய்திருந்தனர்.

Advertisement