ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு

9



சென்னை: ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை ஐகோர்ட் கட்டுப்பாடு விதித்து உள்ளது.


ஊட்டி, கொடைக்கானலுக்கு அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் வந்து செல்வதால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரித்த ஐகோர்ட், தினமும் எத்தனை வாகனங்கள் வந்து செல்கின்றன என்பதை கண்டறிய, இ-பாஸ் வழங்கும் நடைமுறையை தொடங்க உத்தரவிட்டது.
அதன்படி இ-பாஸ் வழங்கும் முறை அமலில் உள்ளது. வாகன எண்ணிக்கை குறித்த தகவல்களை சேகரித்து சென்னை ஐ.ஐ.டி, பெங்களூரு ஐ.ஐ.எம்., ஆகியன ஆய்வு நடத்தி வருகின்றன.
இது முடிய காலஅவகாசம் தேவைப்படும் நிலையில், வரும் கோடை விடுமுறையின் போது, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாகனங்களை அனுமதிப்பது குறித்து பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது.


இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.


அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ' சாதாரண மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடைக்கானலில் 50 இருக்கைகள் கொண்ட பஸ்களுக்கு கலெக்டர் தடை விதித்து உள்ளார். வாகனங்களை அனுமதிப்பது தொடர்பாக ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., நடத்தி வரும் ஆய்வு முடிய இன்னும் 9 மாதங்கள் அவகாசம் தேவைப்படும்' எனக்கூறினார்.


இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
ஊட்டியில் வார நாட்களில் 6 ஆயிரம், வார இறுதி நாட்களில் 8 ஆயிரம்,
கொடைக்கானலில் வார நாட்களில் 4 ஆயிரம், வார இறுதி நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களை அனுமதிக்கலாம்.
இந்த கட்டுப்பாட்டில் இருந்து உள்ளூர் வாகனங்கள், விவசாய வாகனங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். அரசு பஸ், ரயில் மூலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. ஏப்., 1 முதல் ஜூன் மாதம் வரை அமலில் இருக்க வேண்டும். இதனை அமல்படுத்துவது குறித்து ஏப்.,25ம் தேதி அறிக்கைதாக்கல் செய்ய வேண்டும்.
கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தொடர்பாக கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும். மின்சார வாகனங்களுக்கு இ பாஸ் வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும். மலை அடிவாரத்தில் இருந்து நகரங்களுக்கு செல்ல மினி மின்சார பஸ்கள் இயக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளனர்.

Advertisement