டோலி கட்டி தூக்கிச்சென்றும் பெண் உயிரை காப்பாற்ற முடியவில்லை; கொடைக்கானல் கிராமத்தினர் கண்ணீர்!

8

கொடைக்கானல்: உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, 8 கிலோமீட்டர் தூரம் டோலி கட்டி தூக்கிச் சென்றும், உயிரைக் காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. சாலை வசதி இல்லாததே இந்த உயிரிழப்புக்கு காரணம் என கொடைக்கானல் வெள்ளகெவி கிராமத்தினர் கண்ணீர் மல்க புகார் தெரிவித்தனர்.


கொடைக்கானலில் ரோடு வசதி இல்லாத தொலைதூர கிராமமாக இருப்பது வெள்ளகெவி கிராமம். கொடைக்கானலை கண்டறிய முதன் முதலில் ஆங்கிலேயர்கள் இக்கிராமத்தை கடந்தே வந்துள்ளனர். இருந்த போதும் கிராமத்திற்கு ரோடு வசதி என்பது கானல் நீராக உள்ளது. உடல் நலம் பாதிக்கப்படுபவர்கள் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொடைக்கானல், அல்லது அதே நேரத்தில் 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரியகுளத்திற்கு டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம் உள்ளது.

கடந்த 2021ல் கிராம மக்களின் 50 ஆண்டு கோரிக்கை ஏற்று கொடைக்கானல் ஆர்.டி.ஓ.,வாக இருந்த முருகேசன் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் ரோடு அமைக்க உத்தரவிட்டார். ஆனால் பணி முடியவில்லை. ரோடு அமைக்கப்படும் என ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்குறுதி அளிக்கப்படுவது வழக்கம். ஆனால் தேர்தல் முடிந்தவுடன் அவை அனைவரும் மறந்து விடுகின்றனர். சாலை வசதி இல்லாததால் கிராம மக்களின் துயரம் மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.


இந்த நிலையில், வெள்ள கவி கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் மனைவி மேகலா 35 , நேற்று இரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கிராமத்தினர் டோலி கட்டி 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கும்பக்கரை பகுதிக்கு தூக்கி சென்று அங்கிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். செல்லும் வழியில் அவர் இறந்து விட்டார்.


தொடரும் துயரத்திற்கு தீர்வாக தங்களுக்கு ரோடு வசதி தேவை என்று இக்கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

Advertisement