சத்தீஸ்கர் பா.ஜ., முதல்வருக்கு தமிழக விவசாயிகள் பாராட்டு

தஞ்சாவூர்:தேர்தல் வாக்குறுதியான, நெல் குவின்டாலுக்கு 3,100 ரூபாய் வழங்கியுள்ள சத்தீஸ்கர் முதல்வரை சந்தித்து, தமிழக விவசாயிகள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

சத்தீஸ்கரில் பா.ஜ., ஆட்சி நடைபெறும் நிலையில், முதல்வரான விஷ்ணு தியோ சாய், தேர்தல் வாக்குறுதியில், நெல் குவின்டால் ஒன்றுக்கு 3,100 ரூபாய், கொள்முதல் விலை வழங்கப்படும் என கூறினார்.

தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வரான விஷ்ணு தியோ சாய், நெல் குவிண்டால் ஒன்றுக்கு, 3,100 ரூபாய் கொள்முதல் விலையை, விவசாயிகளுக்கு வழங்கினார்.

பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக, நெல் குவின்டால் 3,100 ரூபாய் வழங்கியதற்கு, தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன் தலைமையிலான தமிழக விவசாயிகள் குழுவினர் நேற்று முன்தினம் சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாயியை நேரில் சந்தித்தனர்.

அவருக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனி, தென்னங்கன்று மற்றும் நெல் மாலையை வழங்கி பாராட்டினர். சத்தீஸ்கர் மாநில உணவுத்துறை செயலர் அன்பழகன் உடனிருந்தார்.

விவசாயிகள் கூறியதாவது:

சத்தீஸ்கர் முதல்வரின் அறிவிப்பு, இந்தியாவிலேயே முன்மாதிரியானது. இந்த அறிவிப்பால், அம்மாநிலத்தில், 2024- -- 25ம் ஆண்டு, 1.50 கோடி டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதால் பாராட்டினோம்.

தமிழக முதல்வரும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பட்சத்தில், அவரையும் பாராட்ட தயாராக உள்ளோம்.

இவ்வாறு தெரிவித்தனர்.

Advertisement