வண்டலுார் முதல் எஸ்.பி.கோவில் வரை தேசிய நெடுஞ்சாலையில் 7 நடைமேம்பாலம்

செங்கல்பட்டு:வண்டலுார் - சிங்கபெருமாள்கோவில் இடையே, தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் நடைமேம்பாலம் அமைக்க, 20.48 கோடி ரூபாயை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒதுக்கீடு செய்து, பணிகள் துவங்கி உள்ளன. இப்பணிகளை 18 மாதங்களில் முடிக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டு உள்ளது.

சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தில் வண்டலுார், தைலாவரம், காட்டாங்கொளத்துார், மறைமலைநகர், சிங்கபெருமாள்கோவில் ஆகிய முக்கிய பகுதிகள் உள்ளன.

குறிப்பாக காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மறைமலைநகர் நகராட்சி அலுவலகம், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், மின்வாரிய அலுவலகம் மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகள், தனியார் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்டவை உள்ளன.

இந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள், அத்தியாவசிய பணி உள்ளிட்ட பல்வேறு தேவைக்கு, ஜி.எஸ்.டி., சாலையைக் கடந்து செல்கின்றனர்.

அரசு அலுவலகங்களுக்கு பல்வேறு தேவைகளுக்காக, தினமும் அதிகமானோர் வந்து செல்கின்றனர். குறிப்பாக, வண்டலுார் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைக்கு, தினமும் ஏராளமானோர் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே கடந்து தான் சென்று வருகின்றனர்.

நெடுஞ்சாலையில் அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களால், சாலை குறுக்கிடும் பகுதியில், 250க்கும் மேற்பட்ட விபத்துகளில், கடந்த ஓராண்டில், நுாறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உள்ளனர்.

இந்த விபத்துகளை தவிர்க்க வண்டலுார், தைலாவரம், காட்டாங்கொளத்துார், மறைமலைநகர், சிங்கபெருமாள்கோவில் ஆகிய பகுதிகளில், தேசிய நெடுஞ்சாலை குறுக்கே நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என, மத்திய, மாநில அரசுகள் மற்றும் செங்கல்பட்டு கலெக்டரிடம், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன் பின், மேற்கண்ட பகுதிகளில் நடைமேம்பாலம் அமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுக்கு, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவையடுத்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள், வண்டலுார் உள்ளிட்ட பகுதிகளில், ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்குப் பின், வண்டலுார் உள்ளிட்ட ஏழு இடங்களில் நடைமேம்பாலம் அமைக்க, 20.48 கோடி ரூபாய் நிதியை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், கடந்த ஆண்டு, மார்ச் மாதம் ஒதுக்கீடு செய்தது.

இப்பணிக்கு, 'டெண்டர்' விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர்கள் டெண்டர் எடுத்தனர்.

இதையடுத்து, வண்டலுார் இரணியம்மன் கோவில், ரயில் நிலையம், தைலாவரம் எஸ்டான்சியா டெக்பார்க், வள்ளியம்மை பொறியியல் கல்லுாரி, காட்டாங்கொளத்துார், மறைமலைநகர் டவுன்ஷிப், சிங்கபெருமாள்கோவில் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் நடை மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.

இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலையில், ஏழு இடங்களில் நடை மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. பணிகளை 18 மாதங்களில் முடிக்க, ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு நடைமேம்பாலங்கள் திறக்கப்படும்.

- பொறியாளர்கள்,தேசிய நெடுஞ்சாலை ஆணையம்,சென்னை.

Advertisement