அருவியில் நீர் வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கச்சிராயபாளையம்: கல்வராயன் மலை அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கல்வராயன் மலையில் பல்வேறு நீர் அருவிகள் உள்ளன. மேலும் அரியலூர், படகுத்துறை சிறுவர் பூங்கா மூங்கில் குடில்கள் உள்ளிட்டவைகளும் பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன. இதனை காண, அண்டை மாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள், கல்வராயன் மலைக்கு வந்து செல்கின்றனர். கோடை துவங்கியதை ஒட்டி, அருவிகளில் நீர்வரத்து சரிந்தது. இதனால் கல்வராயன் மலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

கடந்த இரு தினங்களாக, கல்வராயன்மலை மற்றும் கச்சிராயபாளையத்தில் மழை பெய்தது. இதைத்தொடர்ந்து அருவிகளில் நீர்வரத்து அதிகரிக்க துவங்கியது. குறிப்பாக தண்ணீர் மிகவும் குறைந்த நிலையில் இருந்த பெரியார் நீர் வீழ்ச்சியில் தற்போது குளிப்பதற்கேற்ற வகையில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இது சுற்றுலா பயணிகளுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.

Advertisement