பழங்குடியினர் மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டுக்கு வரவேற்பு
பழங்குடியினர் மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டுக்கு வரவேற்பு
ஈரோடு:தமிழக அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம்தென்னரசு நேற்று தாக்கல் செய்தார். இதுபற்றி பல்வேறு துறை சார்ந்தோர் தங்கள் கருத்தாக கூறியதாவது:
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி: இஷ்டத்துக்கு நிதியை வாரி வழங்கியுள்ளனர். அதற்கான நிதியாதாரம் கூறவில்லை. பட்ஜெட்டுக்கு பின் மிகப்பெரிய அளவு வரி விதிப்பு இருக்கும். வரும், 2026 தேர்தலை முன்னிறுத்தி பல சலுகைகள் வழங்கி உள்ளனர். புதிய அரசு கலைக்கல்லுாரி, 10 திறப்பதாக கூறியுள்ளனர். ஏற்கனவே உள்ள அரசு கல்லுாரிகளில் இடம் நிரப்பவில்லை; சில தனியார் கல்லுாரிகளை மூடுகின்றனர். மகளிருக்கு சிறப்பு சலுகையில் தவறில்லை. உரிமை தொகை, இலவச பஸ் பயணம் என பல உள்ள நிலையில் இன்னும் மகளிருக்கு பல அறிவிப்புகள் தேவையற்றது. பெண் பெயரில் பத்திரம் பதிந்தால், கட்டணத்தில், 1 சதவீதம் சலுகை ஏன். 20 லட்சம் மாணவர்களுக்கு 'லேப்டாப்' எதற்கு. ஏற்கனவே, 8.5 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. அதை திரும்ப அடைக்க திட்டமில்லை.
பழங்குடியினர் கல்வி செயல்பாட்டாளர் சுடர் நடராஜ்: மலை கிராமங்களில் பழங்குடி குழந்தைகள் இடைநிற்றலை தடுக்க, 14 உயர்நிலை பள்ளிகள், மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தியுள்ளது அவசியமானது. 10,000 மகளிர் குழுக்கள் துவங்க அறிவித்துள்ளனர். அவர்களுக்கு முறையான பயிற்சி, தொழில் முனைவோருக்கான ஊக்கம் தர வேண்டும். பழங்குடியினர் வாழ்வாதார கொள்கை, மலைப்பகுதி வளர்ச்சி திட்டங்களை வரவேற்கலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுக்கு, 3,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது முன்னேற்றம் தரும். இவை மக்களை சென்றடைய நடவடிக்கை தேவை.
விசைத்தறி நெசவாளர் கந்த வேல்: அர சின் இலவச வேட்டி, சேலைக்கு எப்போதும், 492 கோடி ரூபாய் ஒதுக்குவர். இந்தாண்டு, 673 கோடி ரூபாய் ஒதுக்கி திட்டத்துக்கு புத்துணர்வு கொடுத்துள்ளனர். இதில் கூலி உயர்வு வரும் என நினைக்கிறோம். ஆண்டுக்கு, 3,000 விசைத்தறியை நவீனமாக்க, 30 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதால் நல்ல மாற்றம் வரும். மருத்துவம் மற்றும் தொழில் நுட்ப துணிகள் உற்பத்திக்கான விழிப்பணர்வுக்கு, 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளனர். திறன் மேம்பாடு, கணினி மயம், நவீனமயமாக்கலுக்கு, 20 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதால், நெசவாளர்கள் பயன் பெறுவர்.
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம்: வரும், 2026 சட்டசபை தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு ஏமாற்றம் தந்துள்ளது. வீட்டு வரி, சொத்து வரி, குப்பை வரி, தொழில் வரி, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வை குறைக்க அறிவிப்பில்லை. இன்னும் அதிக கடன் வாங்கி, வழித்தடம் அமைப்பது, சுற்றுலா மேம்பாடு, ரிங் ரோடு போன்றவை நம்மை கடனாளியாக்கும். அரசு ஊழியர்களின் நீண்ட கால நிலுவையான சரண்டர் விடுப்புத்தொகை பற்றி அறிவிப்பில்லை.
மேலும்
-
புறக்காவல் நிலையம் திறப்பு
-
பட்ஜெட் நேரடி ஒளிபரப்பு மக்களிடம் ஆர்வம் இல்லை தி.மு.க.,வினரும் கண்டுகொள்ளவில்லை
-
ரயிலில் அடிபட்டவர் அடையாளம் தெரிந்தது
-
யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
-
திருவாடானை தாலுகா அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி
-
தமிழக பட்ஜெட்டிற்கு ஆதரவும் எதிர்ப்பும் பல்வேறு தரப்பினர் சொல்வது என்ன