தமிழக பட்ஜெட்டிற்கு ஆதரவும் எதிர்ப்பும் பல்வேறு தரப்பினர் சொல்வது என்ன

நேற்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டிற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு பெரிய திட்டங்கள் இல்லை; மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மாநில அரசின் நிதி ஒதுக்கப்படவில்லை; ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் கவனிக்கப்படவில்லை என்று அதிருப்திகள் பல. மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம் விரிவாக்கம், மகளிர், முதியோருக்கான சமூக நல திட்டங்களுக்கு வரவேற்பும் கிடைத்துள்ளது. இப்படி பல்துறையினரின் பட்ஜெட் குறித்த விமர்சனங்கள் இதோ.
அரசு ஊழியர்கள் ஏமாற்றம்
தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த தேர்தலின் போது அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை. குறிப்பாக மிகவும் எதிர்பார்த்த முதன்மை கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து அறிவிக்கவில்லை. மாறாக சரண்டர் விடுப்பு இவ்வாண்டு முதல் வழங்கப்படாமல் அடுத்த ஆண்டு 2026 ஏப்.,1 முதல் வழங்கப்படும் என அறிவித்துள்ளது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மொத்தத்தில் அரசு ஊழியர்களுக்கு இந்த 2025-26ம் ஆண்டு பட்ஜட் மிகுந்த ஏமற்றத்தை அளித்துள்ளது. இந்த ஆட்சியில் எல்லாமே அறிவிப்பாக மட்டுமே உள்ளது. எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதே சமயம் ராமநாதபுரத்தில் தொழில் பேட்டை, புதிதாக அரசு அருங்காட்சியகம், ராமேஸ்வரத்தில் விமான நிலையம் ஆகியவற்றை வரவேற்கிறோம்.
- எல்.விஜயராமலிங்கம்
மாவட்ட தலைவர்அரசு ஊழியர் சங்கம், ராமநாதபுரம்
விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த அறிவிப்பு இல்லை
பெண்களுக்கு புதிதாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்படும். பெண்கள் பெயரில் சொத்துப்பதிவுக்கு 1 சதவீதம் கட்டணம் குறைப்பு, ராமநாதபுரத்தில் தொழிற்பேட்டை, ராமேஸ்வரத்தில் விமான நிலையம் ஆகிய விஷயங்கள் வரவேற்கத்தக்கது. மேலும் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம், மகளிர் உரிமைத்தொகை பெற புதிய விண்ணப்பம் பெறப்படும். மகளிர் பஸ் பயணத்திற்கான நிதி ஒதுக்கீடு. தோழி விடுதிகள் அமைப்பது, ஒரு லட்சம் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு வரவேற்கதக்கது.
அதே நேரம் விலை வாசி நாளுக்கு நாள் விஷம் போல் உயர்ந்து கொண்டிருக்கிறது. அதனை கட்டுப்படுத்த எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும் என்பதற்கான எந்த அறவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
- கே.சித்ராதேவி
குடும்பத்தலைவிபாரதி நகர், ராமநாதபுரம்
இனிப்பு, கசப்பு இரண்டும் உள்ளது
தனுஷ்கோடியில் பறவைகள் சரணாலயம், ராமேஸ்வரத்தில் விமான போக்குவரத்து, ராமநாதபுரத்தில் புதிய அருங்காட்சியகம் என பல திட்டங்களை பட்ஜெட்டில் அறிவித்ததை வரவேற்கிறேன். இந்த அறிவிப்பு அப்படியே நின்று விடாமல் விரைவில் செயல்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் நன்றாக இருக்கும். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடிப்பு, சுற்றுலா தவிர பிறதொழில்கள் இல்லாத நிலையில் புதிய தொழில் கொள்கையை அறிவிக்காதது ஏமாற்றமே. ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் சுற்றுலாவை மேம்படுத்தவும், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவும் திட்டம் இல்லை. நிதியும் ஒதுக்கவில்லை. மொத்தத்தில் பட்ஜெட்டில் இனிப்பு, கசப்பு இரண்டுமே உள்ளது.
- என்.ஜே.போஸ்
விசைப்படகு மீனவர் சங்க தலைவர் ராமேஸ்வரம்
மகளிர் குழுக்கள் பயனடைவார்கள்
புதிதாக 10 ஆயிரம் மகளிர் சுய உதவி குழுக்கள் அமைப்பது மற்றும் பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் வகையில் ஒரு லட்சம் பெண்களுக்கு 20 சதவீதம் மானியத்துடன் ரூ.10 லட்சம் கடன் வழங்கும் புதிய திட்டங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பயனடைவார்கள். மகளிர் சுய உதவி குழுக்கள் வங்கிகளில் கடன் பெறுவது, உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல், குறிப்பிட்ட பொருட்களின் தேவைகள் உள்ளிட்டவைகள் குறித்து கிராமப் பகுதிகளில் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மேலும் பயனடைய முடியும். பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்தால் ஒரு சதவீத கட்டண குறைப்பு திட்டம் வரவேற்கக் கூடியது. அதே நேரத்தில், பத்திரப்பதிவு செய்தவுடன், தானாக பட்டா மாறுதல் செய்யும் திட்டத்தை அரசு முனைப்புடன் செயல்படுத்த வேண்டும். ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் திட்டம் வரவேற்க கூடியது.
- ஆர்.கார்த்திகா
மகளிர் சுய உதவிக் குழு, ஆய்ங்குடி, ஆர்.எஸ்.மங்கலம்
தொலைநோக்கு பார்வை
------------------ரூ.150 கோடியில் புரதான கட்டடங்கள் பழமை மாறாமல் புதுக்கப்படுவது பாராட்டுக்குரியது. அனைத்து மாநகராட்சிகளிலும் முதல்வர் படைப்பகம் அமைக்கப்படுவதற்கு ஒரு மையத்திற்கு தலா 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. இதன் மூலமாக ஆராய்ச்சி படிப்புகள் மேற்கொள்ளக்கூடிய மாணவர்கள் மேம்படுவதற்கு வசதியாக இருக்கும். ரூ.77 கோடியில் மேலும் 10 இடங்களில் 800 பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் தோழி விடுதிகள் அமைப்பதால் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பிற்கு பலமாக அமையும். 45 உலக மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்படுவதன் மூலம் ஐ.நா சபை அங்கீகரித்துள்ள 193 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பெருமை உடைய நுாலாக திருக்குறள் மாறி உள்ளது. இதற்கு எனது வரவேற்பு உண்டு. தொலை நோக்கு பார்வை கொண்டுள்ள பட்ஜெட் ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
- என்.யமுனா
வணிகவியல் துறை தலைவர்செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரி, கீழக்கரை
பெண்கள் முன்னேற்றத்திற்கு துாண்டுகோல்
பின் தங்கிய ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்கப்படும். ராமநாதபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2500 கோடி ரூபாய் கல்விக் கடனுக்கு ஒதுக்கப்பட்டதன் மூலம் உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை அதிகரிக்கும் சூழலில் மாணவர்களின் கல்வி கற்கும் ஆர்வம் அதிகமாகும். உற்பத்தியாளர்கள் அதிகமாக ஈர்க்கப்படுவதால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். 20 சதவீதம் மானியத்துடன் ரூ. 10 லட்சம் கடன் வழங்கி ஒரு லட்சம் பெண்களை தொழில் முனைவோர் ஆக்க ரூ.225 கோடியில் புதிய திட்டம் அறிவித்துள்ளார்கள். இது பெண்களின் முன்னேற்றத்திற்கு தூண்டுகோலாக அமையும்.
- எஸ்.தினகரன்
ஆடிட்டர், பரமக்குடி
தென் மாவட்டங்களுக்கு பயனில்லை
ஆன்மிக சுற்றுலாத் தலமாக விளங்கும் ராமேஸ்வரத்தில் விமான நிலையம், 10 லட்சம் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.25 கோடி கடன் வழங்கும் திட்டம், மதுரை, கடலுாரில் காலணி தொழிற்பூங்கா போன்ற திட்டங்கள் வரவேற்கதக்கது.
வர்த்தகர்கள் பயன் பெறும் வகையில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என்று ஆவலுடன் எதிர்பார்த்தோம். ஆனால் புதிய அறிவிப்பு இல்லை. சென்னைக்கு அருகே புதிய நகரம் அமைப்பதன் மூலம் அப்பகுதி தான் வளர்ச்சியடையும். தென் மாவட்டங்களுக்கு பயனில்லை.
- ஆதி.மகாலிங்கம்
வர்த்தகர், திருவாடானை
- நமது நிருபர் குழு -