பட்ஜெட் நேரடி ஒளிபரப்பு மக்களிடம் ஆர்வம் இல்லை தி.மு.க.,வினரும் கண்டுகொள்ளவில்லை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட், பஸ் ஸ்டாப் ஆகிய இடங்களில் தமிழக பட்ஜெட் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை பார்க்க பொதுமக்கள் மட்டுமின்றி தி.மு.க.,வினரும் ஆர்வம் காட்டாதால் சேர்கள் காலியாக கிடந்தன.
தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்வதை செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பஸ் ஸ்டாப் ஆகிய இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதற்காக பந்தல் அமைத்து சேர்கள் போட்டிருந்தனர். இருப்பினும் பொதுமக்கள் பார்வையிட வராததால் சேர்கள் காலியாக கிடந்தன. அரசு விழா, கட்சி கூட்டங்களுக்கு ஆள் சேர்க்கும் ஆளுங்கட்சியை சேர்ந்த தி.மு.க.,வினர் கூட தொண்டர்களை அழைத்து வரவில்லை. பட்ஜெட் நேரடி ஒளிபரப்பை யாரும் கண்டுகொள்ளவில்லை என மக்கள் பேசிக்கொண்டனர்.
பெரும்பாலான மக்கள் ஆண்ட்ராய்டு அலைபேசியில் பட்ஜெட் அறிவிப்புகளை நேரடியாக பார்க்கும் இக்காலத்தில் பொது இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்வது தேவையில்லை. இது போன்ற செயல்முறைகளால் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது என மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.