திருவாடானை தாலுகா அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணை ஊழியர்கள் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.

தொண்டி அருகே சம்பை கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் மனைவி ராணி 35. கணவர் இறந்து விட்டார். இவருக்கு சொந்தமான வீட்டிற்கு செல்லும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டதால் நடந்து செல்ல வழியில்லாமல் தவித்தார். அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையடுத்து நேற்று காலை 11:00 மணிக்கு திருவாடானை தாலுகா அலுவலகத்திற்கு சென்ற ராணி மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைக்க முயற்சி செய்தார். அதை பார்த்த அலுவலக ஊழியர்கள் தண்ணீரை மேலே ஊற்றி காப்பாற்றினர்.

அதனை தொடர்ந்து அலுவலக வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். திருவாடானை போலீசார் சமரசம் செய்தனர். ராணி கூறியதாவது:

எனக்கு சொந்தமான வீட்டு பட்டா இடம் வேறு நபருக்கு மாற்றப்பட்டுள்ளது. நான் வசிக்கும் வீட்டிற்கு செல்ல வழியில்லை. வேலியை தாண்டி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இது சம்பந்தமாக நேற்று முன்தினம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்தேன்.

திருவாடானை தாலுகா அலுவலகத்திற்கு செல்லுங்கள் என்று கூறினர். அதனால் திருவாடானை தாலுகா அலுவலகத்திற்கு வந்து புகார் செய்தேன். இங்குள்ள அலுவலர்கள் கண்டுகொள்ளாததால் தீக்குளித்து தற்கொலை செய்ய முடிவு செய்தேன் என்றார்.

தாசில்தார் அமர்நாத் கூறுகையில், நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்திலிருந்து தகவல் வந்தவுடன் உடனடியாக சென்று பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பிட்ட பாதை தான் வேண்டும் என்று அவர் கூறியதால் 10 நாட்கள் பொறுத்திருங்கள் நில அளவை செய்து ஏற்பாடு செய்யப்படும் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

அவருடைய பட்டா எண் ஆன்லைனில் பதிவாகவில்லை. முறைப்படி மனு கொடுத்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதனை தொடர்ந்து அலுவலர்கள் ராணி வீட்டிற்கு சென்று அவர் குறிப்பிட்ட வழியில் செல்லும் வகையில் பாதைக்கு நடவடிக்கை எடுத்தனர்.

Advertisement