கால்நடைத்தீவனம், எத்தனால் உற்பத்திக்கு உகந்த மக்காச்சோளம்; நிதி ஒதுக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

கோவை: மக்காச்சோளத்துக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில் கால்நடைத் தீவனம், எத்தனால் உற்பத்திக்கு உகந்த, புரதம், மாவுச்சத்து நிறைந்த வீரிய ரகங்களை உருவாக்குவதற்கு ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். இதற்காக திட்டங்கள் வகுத்து, வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்காச்சோள விவசாயிகள் கூறியதாவது: மக்காச்சோளத்தில் 60 முதல் 70 சதவீத மாவுச்சத்து உள்ளது. இது எத்தனால் தயாரிக்க முக்கிய மூலப்பொருளாக உள்ளது.
டென்ட் கார்ன் எனப்படும் குழி மக்காச்சோளத்தில் மாவுச்சத்து அதிகமாக உள்ளது. இவற்றில் 75 சதவீதம் வரை மாவுச்சத்து உண்டு. தமிழ்நாடு வேளாண் பல்கலை அறிமுகம் செய்த கோ 6 உள்ளிட்ட ரகங்களும், சில தனியார் ரகங்களும் எத்தனால் உற்பத்திக்கு ஏற்றவையாக இருந்தபோதும், அவை பிரத்யேகமாக எத்தனால் உற்பத்திக்காக உருவாக்கப்பட்டவை அல்ல.
எனவே பயன்பாட்டில் உள்ள மஞ்சள் நிற குழி மக்காச்சோள கலப்பின ரகங்களை இன்னும் மேம்படுத்தி, அதிகமான ஸ்டார்ச் கொண்ட ரகங்களை உருவாக்க வேண்டும்.
பஞ்சாப் அரசு, பி.எம்.ஹெச். 17 என்ற ஸ்டார்ச் அதிகம் கொண்ட புதிய ரகத்தை அறிமுகம் செய்துள்ளது. ''96 நாள் பயிரான இந்த ரகம் மே, ஜூன் மாதங்களில் சாகுபடி செய்யலாம். எத்தனால் உற்பத்திக்கு உகந்தது” என, அம்மாநில வேளாண் துறை இயக்குநர் ஜஸ்வந்த் சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு எத்தனால் கலப்பு எரிபொருள் திட்டத்தை ஊக்குவித்து வரும் நிலையில் இதுபோன்ற ரகங்கள் வேளாண் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும்.
கால்நடைத்தீவனம்
மக்காச்சோளம் கால்நடைத் தீவன தயாரிப்பிலும் மிக முக்கிய மூலப்பொருளாக உள்ளது. இதில் உள்ள 7 முதல் 9 சதவீதம் வரை உள்ள புரதச் சத்து கால்நடைத் தீவனத்துக்கு தேவைப்படுகிறது.
மாட்டு தீவனத்தில் 20 முதல் 25 சதவீத புரதம் தேவை. எனவே மக்காச்சோளத்துடன் சோயா உள்ளிட்ட இதர பயறுகள் புண்ணாக்கு சேர்க்கப்படுகிறது.
கோழி தீவனத்தில் இறைச்சி, முட்டைக் கோழிகளுக்கு 16 முதல் 18 சதவீதம் புரதம் இருக்க வேண்டும். எனவே, கோழித்தீவனத்திலும் மக்காச்சோளத்துடன்,சோயா சேர்க்கப்படுகிறது.
சமீபத்தில் சீனா, அதிக புரதம் கொண்ட புதிய ரகத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில், 10 சதவீத புரதம் உள்ளது.
உலகிலேயே அதிக சோயா பீன் இறக்குமதி செய்யும் நாடாக சீனா உள்ளது. அமெரிக்கா மற்றும் பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்கிறது. அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் பாதிப்பில் இருந்து தவிர்க்கவும், சோயா இறக்குமதியைக் குறைக்கவும், சீனா அதிக புரதம் கொண்ட புதிய ரக மக்காச்சோளத்தை உருவாக்கியுள்ளது.
க்யூ.பி.எம்., ரகங்கள்
அதிக புரதம் கொண்ட மக்காச்சோள ரகங்கள் க்யூ.பி.எம்., என அழைக்கப்படுகின்றன. இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் க்யூபிஎம் ரகங்கள் சிலவற்றில் 13 சதவீதம் புரதம் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவை விவசாயிகளிடம் அதிகம் புழக்கத்தில் இல்லை.
எனவே, அதிக உற்பத்தித் திறனுடன் கோழித் தீவனம், எத்தனால் உற்பத்திக்கு பிரத்யேகமாக மக்காச்சோள ரகங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் மக்காச்சோள பற்றாக்குறை நிலவும் நிலையில், இந்த புதிய ரகங்கள் தொழிற்சாலைத் தேவைகளையும் பூர்த்தி செய்யும், விவசாயிகளுக்கும் வருவாய் கொடுக்கும்.
எனவே, வேளாண் பட்ஜெட் அல்லது விவாதத்தின்போது, புதிய மக்காச்சோள ரகங்களை உருவாக்கும் செயல்திட்டம் அறிவிக்கப்பட்டு, ஆராய்ச்சிக்காக போதிய நிதி ஒதுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
புறக்காவல் நிலையம் திறப்பு
-
பட்ஜெட் நேரடி ஒளிபரப்பு மக்களிடம் ஆர்வம் இல்லை தி.மு.க.,வினரும் கண்டுகொள்ளவில்லை
-
ரயிலில் அடிபட்டவர் அடையாளம் தெரிந்தது
-
யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
-
திருவாடானை தாலுகா அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி
-
தமிழக பட்ஜெட்டிற்கு ஆதரவும் எதிர்ப்பும் பல்வேறு தரப்பினர் சொல்வது என்ன