நீரிழிவா... அது, சீரழிவு!

அதிக உணவு சாப்பிட்டும், உடல் எடை அதிகரிக்காவிடில், நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம். மருத்துவ பரிசோதனைகள் வாயிலாக இதை உறுதி செய்து கொண்டு, சிகிச்சைக்கு உட்படுத்துவது அவசியம்.

மனிதர்களை போலவே, செல்லப்பிராணிகளுக்கும் நீரிழிவு பாதிப்பு ஏற்படலாம். இதனால், 7 முதல் 14 வயதுக்குட்பட்ட, நடுத்தர வயது கொண்ட நாய்களுக்கு, நீரிழிவு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

டச்ஹவுண்ட், பூடில், பீகில் இன பப்பிகளுக்கு, மரபு ரீதியாக, நீரிழிவு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளதால், உரிய மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும். இதிலும், உடல் எடை அதிகமுள்ள, கருத்தடை அறுவை சிகிச்சை செய்யாத பெண் நாய்களுக்கு, இப்பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

வழக்கத்தை விட அதிக தண்ணீர் குடிப்பது, உணவு சாப்பிடுவது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, உடல் எடை குறைதல், சோர்வு போன்றவை, நீரிழிவு பாதிப்பின் அறிகுறிகளாகும். பப்பி சாப்பிடுவதற்கு முன்பு, ரத்தத்தில் சர்க்கரை அளவு, 70-120 மில்லிகிராம்/ டெசிலிட்டராக இருக்க வேண்டும். இதைவிட அதிகமிருந்தால், கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். இதில் அலட்சியம் காட்டினால், பாதிக்கப்பட்ட பப்பிக்கு, கண்புரை, சிறுநீர் தொற்று ஏற்படலாம்.

பொதுவாக, டைப் 1 நீரிழிவு பாதிப்பே, பப்பிகளுக்கு அதிகம் ஏற்படுவதால், இன்சுலின் ஊசி போட்டு கொள்ள பரிந்துரைக்கப்படும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, சர்க்கரை அளவை பரிசோதிப்பது அவசியம். கால்நடை மருத்துவர் பரிந்துரைக்கும் உணவு முறைகளை பின்பற்றி, உரிய மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தினால், இப்பாதிப்பில் இருந்து பப்பியை மீட்டெடுக்கமுடியும்.

- சி.எம்.நிஷாந்திகா ஜெஷ்வின்,

கால்நடை மருத்துவர், சென்னை.

Advertisement