'ஆல் இன் ஆல் அழகு' தக்காளி தொக்கு

பல விதமான சைட் டிஷ்கள் இருந்தாலும், ஒரு சில சைட் டிஷ்கள் மட்டும் தான், அனைத்து விதமான சாப்பாட்டுக்கும் செட் ஆகும். இப்படி, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒன்று என்றால், அது தக்காளி தொக்கு தான்.

சூடான தக்காளி தொக்கை, சப்பாத்தி அல்லது சுடு சாதத்தில் போட்டு சாப்பிட்டால், தேவாமிர்தமாக இருக்கும். இந்த தக்காளி தொக்கிலும் கூட, ஒரு புதுவிதமான முறையில் செய்து, சாப்பிட்டுப் பார்த்தால் எப்படி இருக்கும்?

தக்காளி, வெங்காயம், பூண்டு என அனைத்தையும் சுட்டு, அதுல இருந்து ஒரு தொக்கு செய்யப் போறோம்.

தேவையான பொருட்கள்



தக்காளி ... 3

உருளைக்கிழங்கு ... 1

சின்ன வெங்காயம் ... 15

பூண்டு ... 10 பற்கள்

கறிவேப்பிலை ... 1 கொத்து

கடுகு, உளுந்தம் பருப்பு ... 1/2 டீஸ்பூன்

மஞ்சள் துாள் ... 1/4 டீஸ்பூன்

கொத்தமல்லி ... சிறிதளவு

உப்பு ... தேவையான அளவு

எண்ணெய் ... தேவையான அளவு

எப்படி செய்வது?



முதலில் விறகு அடுப்பில் அல்லது நெருப்பில், வெங்காயம், தக்காளி இரண்டையும் தனித்தனியாக நன்கு சுட்டு எடுத்துக் கொள்ளவும். பூண்டு, பச்சை மிளகாய், உருளைக்கிழங்கையும் சுட்டு எடுத்துக் கொள்ளவும். இந்த சுட்ட காய்கறிகளை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். சிறிது நேரத்திற்கு பின், சூடு ஆறிய பின், அவற்றின் தோலை நீக்கவும்.

இதன் பின்னர், அனைத்தையும் அம்மியில் போட்டு நன்றாக இடித்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.

பிறகு, இடித்து வைத்ததை வாணலியில் போட்டு, மிளகாய் துாள், மஞ்சள் துாள், சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வதக்கவும். இறுதியாக கொத்தமல்லி இலைகளை லேசாக துாவி இறக்கினால், சுட்ட தக்காளி தொக்கு தயார்.




- நமது நிருபர் -

Advertisement