கொக்கு பற... பற... : பறவைகள் கணக்கெடுப்பில் மதுரை மாவட்டம்: 50க்கும் மேலான நீர்வாழினம் கண்டறியப்பட்டன

மதுரை: தமிழகம் முழுதும் ஆண்டுதோறும் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக நீர் பறவைகள், அடுத்த கட்டமாக சமவெளியில் வாழும் பறவைகளின் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் மாடக்குளம் கண்மாய், வண்டியூர் கண்மாய், சாமநத்தம், தென்கால், தனிச்சியம், பரவை, கோரிப்பாளையம் பகுதி வைகை வடகரை, தென்கரை, உசிலம்பட்டி வாகைகுளம் உள்ளிட்ட 25 நீர்நிலைகளில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது.
மாவட்ட வன அதிகாரி தருண்குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், மாணவர்கள், 50க்கும் மேற்பட்ட வன அலுவலர்கள் அடங்கிய 25 குழுக்கள் இக்கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். காலை 6:00 மணி முதல் 11:00 மணி வரை இக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மாவட்டத்தில் அரிவாள் மூக்கன், செந்நாரை, வண்ண நாரை, பாம்புத் தாரா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நீர்வாழ் பறவை இனங்கள் கண்டறியப்பட்டன.
மார்ச் 16ல் சமவெளி பறவைகள் கணக்கெடுப்பு பசுமலை, கொடிமங்கலம், பெருமாள் மலை, யானைமலை உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் நடத்தப்படுகிறது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் புதிய வரவாக வெளிநாட்டு, வெளிமாநில பறவை இனங்கள் வந்துள்ளதா என்பதை இக்கணக்கெடுப்பின் மூலம் ஆவணப்படுத்த முடிகிறது. கணக்கெடுப்பு விபரங்கள், மாவட்ட வன அலுவலர்கள் வாயிலாக தமிழகம் முழுதும் திரட்டப்பட்டு வனத்துறை தலைமையகம் வாயிலாக விபரங்கள் வெளியிடப்படுகின்றன.
இதுபோன்ற கணக்கெடுப்புகளின் மூலம் அரியவகை, அழிந்து வரும் பறவை இனங்களை பாதுகாக்க ஒரு நல்வாய்ப்பாக அமையும் என பறவை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.