'குறைந்தபட்சம் 2 குழந்தைகளை பெறணும்': ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

ஹைதராபாத் : “பெண்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள வேண்டும்,” என அறிவுரை கூறியுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சிரித்தபடி, “தேவைப்பட்டால் வருங்காலங்களில் இதுகுறித்து வீடுகள் கண்காணிக்கப்படும்,” எனவும் கூறினார்.
தென் மாநிலங்களில் மக்கள் தொகை பிறப்பு விகிதம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பலமுறை கருத்து கூறியுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, 'நீங்கள் நினைப்பது போல உங்கள் பெற்றோர் நினைத்திருந்தால், இப்போது நீங்கள் பிறந்திருக்க முடியுமா; உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட குறைந்தபட்சம் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் தான் இனிமேல் பரிசீலிக்கப்படுவர்' என்றும் கூறியிருந்தார்.
மேலும் அவர், 'குழந்தை இல்லா தம்பதியை சமூகத்தில் பலரும் ஒதுக்கி வைப்பர்' என்றும் கூறி, சர்ச்சையை கிளப்பியிருந்தார். முன்னதாக, 'ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகள்
செய்த தவறை நாமும் செய்யக்கூடாது' என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திர சட்டசபையில் நேற்று பேசும்போது, “பெண்கள் குறைந்தபட்சம் இரண்டு குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும். இது தொடர்பாக கிராமங்களிலும், தொகுதிகளிலும் விவாதம் நடத்தப்பட வேண்டும்,” என்றார்.
மேலும் அவர் சிரித்தபடி, “தேவைப்பட்டால் இதுகுறித்து வருங்காலங்களில் வீடுகளை கண்காணிக்கவும் அரசு தயங்காது,” எனவும் கூறினார்.




