பொது காப்பீடு துறையில் கால்பதிக்கிறது பதஞ்சலி

புதுடில்லி:மாக்மா ஜெனரல் காப்பீடு நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை கைப்பற்றி உள்ள பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம், பொது காப்பீடு துறையில் கால்பதிக்க உள்ளது.
யோகா குரு பாபா ராம்தேவுக்கு சொந்தமான பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம், ஹரித்வாரை தலைமையிடமாக கொண்டு, ஹெல்த்கேர், நுகர்பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், சனோதி பிராப்பர்டீஸ் வசமிருந்த மாக்மா ஜெனரல் காப்பீடு நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை, டி.எஸ்., குழுமத்துடன் இணைந்து 4,500 கோடி ரூபாய்க்கு பதஞ்சலி நிறுவனம் வாங்கி உள்ளது. பதஞ்சலி ஆயுர்வேத் தவிர, மாக்மா பங்குகளை, எஸ்.ஆர்., அறக்கட்டளை, ஆர்.ஐ.டி.ஐ., அறக்கட்டளை, ஆர்.ஆர்., அறக்கட்டளை, சுவாதி அறக்கட்டளைகளும் வாங்கி உள்ளன.
எல்.ஐ.சி., எச்.டி.எப்.சி., லைப், ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் லைப், எஸ்.பி.ஐ., லைப் போன்ற பெரும் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் பொது காப்பீடு துறையில், பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனமும், நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.