மற்றும் பலர் என்ற பட்டியலில் தான் போடுகிறார்கள்: சீமான் வருத்தம்

சென்னை: 'நான் கட்சி ஆரம்பிக்க வரலை. நான் பரமக்குடியில் வண்டி ஏறுனது படம் எடுத்து பஞ்சம் பிழைக்கத்தான். காலம் என்னை இங்கு கொண்டு வந்து விட்டது' என்று சாணக்யா நிகழ்ச்சியில் நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சாணக்யா யூடியூப் சேனலின் 6ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் மாநில காங்கிரஸ் ஜி.கே.வாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சீமான் பேசியதாவது; பீஹாரில் இருந்து தேர்தல் வியூகம் வகுப்பாளரை கூட்டிட்டு வர்றீங்க. எங்ககிட்ட ஆளு இருக்குப்பா. இன்னமும் வியப்பாத்தான் இருக்கிறது, அ.தி.மு.க.,வில் செங்கோட்டையனை தாண்டி ஒரு தேர்தல் வியூக வகுப்பாளர் இருப்பதாக எனக் தெரியவில்லை. இந்த நிகழ்ச்சியில் நாங்கள் பங்கேற்பதால் விமர்சனங்கள் வரக் கூடாது என்பதால், பாண்டே முன்கூட்டியே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நான் ஈ.வெ.ரா.வை எதிர்க்கிறதை யாரோ சொல்லி கொடுத்து தான் செய்கிறேன் என்கிறார்கள். நான் படம் பார்த்து கதை சொல்லவில்லை. படித்து தான் பேசுகிறேன். படித்து என்னுடைய கருத்தை எடுத்து வைக்கிறேன். இதற்கு பதில் சொல்லுங்கள் என்கிறேன். பாண்டே அந்த விழாவில் பங்கேற்காமல், நாங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தால், ஒருவாரத்திற்கு நாங்கள் தான் தலைப்பு செய்தி.

முன்பெல்லாம் பத்திரிகையில் வந்திடப் போகுது எனப் பயப்படுவார்கள். ஆனால், இப்பெல்லாம், பத்திரிகைக்கு தெரிந்தே தான் தவறு நடக்கிறது. நமக்கு என்ன தோன்றுகிறது என்றால், ஒரு நல்ல அரசியல் உருவாக்கணும், ஆட்சியை அமைக்கணும் என்பது தான் ஒவ்வொருவரின் கடமை. ஊடகங்கள் பொய் பேசுவதை விட புரணி பேசுகிறது. இது டிஜிட்டல் புரணி.

நான் கட்சி ஆரம்பிக்க வரலை. நான் பரமக்குடியில் வண்டி ஏறுனது படம் எடுத்து பஞ்சம் பிழைக்கத்தான். காலம் என்னை இங்கு கொண்டு வந்து விட்டது. சரி, சரணடைந்து வாழ்வதற்கு, சண்டையிட்டு சாவோமடா? என்ற கோட்பாடு தான் எங்களுடையது.

தேர்தலின் போது, கருத்துக்கணிப்பில் 4 விழுக்காடு, 5 விழுக்காடு, 7 விழுக்காடு என்று போடுகிறார்கள். என்னை மற்றும் பலர் என்ற பட்டியலில் தான் போடுகிறார்கள். அரசியல் என்பது வியாபாரம் ஆகிவிட்டது. இப்ப தான் செய்தி வருது, ரூ.30 ஆயிரம் கோடி தேர்தலுக்கு ஒதுக்கீட்டாங்கணு. ஒரு தொகுதிக்கு ரூ.150 கோடி. சாதி, மதம், சாராயம், பணம், திரைக்கவர்ச்சியால் தான் அரசியல் கட்டமைக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரனை விட, கள்ளச்சாராயம் குடித்து செத்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு அதிகம். ஊடகங்கள் இதை எல்லாம் பேசாது. நாங்கள் அழுத்தம் கொடுத்தால் அதிகபட்சம் கலெக்டர், போலீஸ் அதிகாரி பணியிட மாற்றம் செய்வார்கள்.

அமெரிக்காவில் டிரம்ப், பைடன் மாதிரி, இங்கேயும் அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் முன்னிலை பேசட்டும். யாரு பேசுவது பிடிக்கிறதோ, அவங்களுக்கு ஓட்டு போடட்டும். ஆனால், பொதுமக்களை கேள்வி கேட்க அனுமதிக்க வேண்டும். அவன் கேட்பான், நீட் தேர்வு ரகசியத்தை சொல்லுங்கள் என்று. இது கன்னித்தீவு ரகசியம் மாதிரி போய்கிட்டே இருக்கிறது. நல்லக்கண்ணு போன்ற தலைவர்கள் இருக்கும் நிலத்தில் நல்ல அரசியல் உருவாக வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement