ரோகித் சர்மா கொடி பறக்குமா: கேப்டனாக தொடர வாய்ப்பு

புதுடில்லி: சாம்பியன்ஸ் டிராபி வென்றதால், ரோகித் சர்மாவுக்கு மவுசு அதிகரித்துள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கும் கேப்டனாக நீடிக்கலாம்.
டெஸ்ட் அரங்கில் ரோகித் 37, தலைமையிலான இந்திய அணி சமீப காலமாக சோபிக்கவில்லை. சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 0-3 என இழந்தது. ஆஸ்திரேலியாவிலும் தொடரை 1-3 என பறிகொடுத்தது. ரோகித் சர்மாவின் பேட்டிங் எடுபடவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்டில் 91, ஆஸ்திரேலியாவுடன் 3 டெஸ்டில் 31 ரன் தான் எடுத்தார். மோசமான 'பார்ம்' காரணமாக சிட்னியில் நடந்த கடைசி டெஸ்டில் தானாக விலகினார். கேப்டன் பொறுப்பை பும்ரா ஏற்றார். இரு தொடர்களை இழந்ததால், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பை இழந்தது.
இங்கிலாந்தில் அசத்தல்: அடுத்த உலக டெஸ்ட் பைனலுக்கான (2025-27) சீசன் விரைவில் துவங்க உள்ளது. இந்திய அணி முதலில் இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் (2025, ஜூன் 20-ஆக.4) பங்கேற்கிறது. இத்தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாக நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இங்கிலாந்து மண்ணில் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். இங்கு 2021ல் 4 டெஸ்டில் ஒரு சதம் உட்பட 368 ரன் (சராசரி 52.57) குவித்துள்ளார். கடந்த 8 மாதங்களில் நுாறு சதவீத வெற்றியுடன் இரண்டு ஐ.சி.சி., உலக கோப்பை ('டி-20', சாம்பியன்ஸ் டிராபி) வென்று கொடுத்துள்ளார். இந்திய அணி கேப்டனாக 24 டெஸ்டில், 12 வெற்றி, 9 தோல்வி, 3 'டிரா' சந்தித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி வெற்றி, இவரது கேப்டன் பதவியை தக்க வைக்க உதவலாம்.
இது குறித்து பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,''ஆஸ்திரேலிய தொடருக்கு பின் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. டெஸ்ட் அணி கேப்டனாக ரோகித் தொடர்கிறார். டெஸ்ட் விளையாட விருப்பம் இல்லை என்று ரோகித் கூறவில்லை. ஓய்வும் பெறவில்லை.
அடுத்து ஐ.பி.எல்., தொடர் நடக்க உள்ளது. இந்த சமயத்தில் தேர்வுக்குழுவினர் 'பிரேக்' எடுத்துக் கொள்வது வழக்கம். குறிப்பிட்ட வீரரின் ஆட்டத்தை கண்காணிக்க வேண்டும் என்றால், அந்த போட்டியை மட்டும் காண செல்வர். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியை தேர்வு செய்வதில் பயிற்சியாளர் காம்பிர் முக்கிய பங்கு வகிப்பார்,''என்றார்.
சித்து ஆதரவு: முன்னாள் வீரர் சித்து கூறுகையில்,''கடந்த முறை இங்கிலாந்து மண்ணில் துவக்க வீரராக ரோகித் சர்மா ரன் மழை பொழிந்தார். அணியில் அனுபவ, இளம் வீரர்கள் இடம் பெற வேண்டும். ரோகித் தான் கேப்டனாக தொடர வேண்டும்,''என்றார்.
ஒலிம்பிக் பதக்கம்: கோலி விருப்பம்
லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் (2028) 'டி-20' போட்டி இடம் பெற்றுள்ளது. இதில், இந்திய ஆண்கள், பெண்கள் அணி பதக்கம் வெல்லலாம். சர்வதேச 'டி-20' அரங்கில் இருந்து ஓய்வு பெற்ற கோலிக்கும் 36, ஒலிம்பிக் பதக்கம் மீது அசை உண்டு.
கோலி 'ஜாலி'யாக கூறுகையில்,''தங்கப்பதக்கத்திற்காக இந்திய கிரிக்கெட் அணி விளையாடினால், ஓய்வை திரும்ப பெற்று அந்த ஒரு போட்டியில் மட்டும் விளையாட முயற்சிப்பேன். பதக்கத்துடன் தாயகம் திரும்புவேன். ஒலிம்பிக் சாம்பியன் என்பது மகத்தான உணர்வு. பதக்கம் வெல்ல நமது அணியினருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஓய்வு இல்லைகிரிக்கெட்டில் இருந்து இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணமில்லை. சாதனைக்காக விளையாடவில்லை, மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதால், ஆர்வத்துடன் விளையாடுகிறேன்,''என்றார்.
மேலும்
-
அரசு கட்டடம் படுமோசம் இடித்து அகற்ற கோரிக்கை
-
'ஜிப் லைனில்' தொங்கியபடி சாகசம்: ஜீன்பூல் மையத்தில் சுற்றுலா பயணியர் ஆர்வம்
-
13 ஆண்டுகளாகியும் பயன்பாடு இல்லாத ஆடு அடிக்கும் தொட்டி: ரூ.37 லட்சம் வீண்
-
வக்கீலை வெட்டிய வாலிபர் கைது
-
'குடி'மகன்கள் அட்டகாசம் அதிகரிப்பு புறக்காவல் நிலையம் மீண்டும் வருமா?
-
துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்க வந்தோருக்கு வரவேற்பு