சச்சினா...லாராவா * இன்று மாஸ்டர்ஸ் 'டி-20' பைனல்

ராய்ப்பூர்: இந்தியாவில் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் 'டி-20' கிரிக்கெட் முதல் சீசன் நடக்கிறது. முன்னாள் வீரர்கள் விளையாடுகின்றனர். இன்று ராய்ப்பூரில் நடக்கும் பைனலில் சச்சின் தலைமையிலான இந்திய அணி, லாராவின் வெஸ்ட் இண்டீஸ் அணியை சந்திக்கிறது. லீக் சுற்றில் இந்திய அணி 5 போட்டியில் 4ல் வெற்றி (1 தோல்வி) பெற்றது.
கேப்டன் சச்சின், யுவராஜ் சிங், ஸ்டூவர்ட் பின்னி, யூசுப் பதான், குர்கீரத் சிங் என பலரும் ரன் வேட்டையில் ஈடுபடுகின்றனர். பந்துவீச்சில் குல்கர்னி, வினய் குமார், சுழலில் ஷாபாஸ் நதீம், நேகி உதவுகின்றனர். மீண்டும் இவர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், மாஸ்டர்ஸ் தொடரின் முதல் சீசனில் இந்தியா சாம்பியன் ஆகலாம்.
வெஸ்ட் இண்டீஸ் அணி லீக் சுற்றில் 5 போட்டியில் 3ல் மட்டும் வென்றது. லீக் சுற்றில் இந்தியா, இலங்கையிடம் தோற்றது. இத்தொடரில் இரண்டு அரைசதம் அடித்த டுவைன் ஸ்மித், சதம் விளாசிய சிம்மன்ஸ் என பேட்டிங் படை வலுவாக உள்ளது. டினோ பெஸ்ட், ரவி ராம்பால், ஆஷ்லே நர்ஸ், ஜெரோம் டெய்லர் சிறப்பாக செயல்படுகின்றனர்.