மல்யுத்தம்: அன்டிம், ரீத்திகா தகுதி * ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு...

புதுடில்லி: ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க அன்டிம், ரீத்திகா தகுதி பெற்றனர்.
ஜோர்டானில் (அம்மான்) ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் மார்ச் 25-30ல் நடக்க உள்ளது. இதற்கான தகுதி போட்டி டில்லி, இந்திரா மைதானத்தில் நடக்கிறது. இந்தியாவின் பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனர்.
பெண்களுக்கான 53 கிலோ பிரிவில் அன்டிம் பங்கேற்றார். 2024 உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற இவர், பாரிஸ் ஒலிம்பிக்கிலும் பங்கேற்றார். நேற்று நடந்த தகுதிச்சுற்றில் இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று, ஆசிய சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க தகுதி பெற்றார். பெண்களுக்கான 76 கிலோ பிரிவில் ரீத்திகா ஹூடா, இரண்டு போட்டியில் வெற்றி பெற்று தகுதி பெற்றார்.
உலக சாம்பியன்ஷிப்பில் 86 கிலோ பிரிவில் வெள்ளி வென்ற தீபக் புனியா, நேற்று ஒலிம்பிக்கில் இல்லாத, 92 கிலோ பிரிவில் களமிறங்கினார். இதன் இரு போட்டியில் வென்றார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற அமன் ஷெராவத், காயம் காரணமாக தகுதி போட்டியில் இருந்து விலகினார்.