மொழிபெயர்ப்பு சாத்தியமானது எப்படி: சாகித்ய அகாடமி விருதாளர் விமலா

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் பிறந்தேன். ஏழ்மையிலும் விடாப்பிடியாக பள்ளி படிப்பை தொடர்ந்து, தொலைதுாரக்கல்வியில் இளங்கலை, முதுகலை தமிழ் படித்தேன். நான் படிப்பதற்காக எனது அக்கா படிப்பை தியாகம் செய்தார். பிளஸ் டூ முடித்து வேலைக்கு சென்றார். அப்பா இல்லை. குடும்பத்தில் பொருளாதார ரீதியாக உதவி செய்யும் அளவுக்கு ஆள் இல்லை. என் அக்கா என்னை படிக்க வைத்தார்.
பின் வேலைக்காக, ஆய்வு படிப்புக்காக சில பல்கலைகழகங்களில் விண்ணப்பித்தேன். தொலைதுார கல்வியில் படித்ததால் துவக்கத்தில் நிராகரிப்பு தான். என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்போது டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் (ஜே.என்.யு.,) இருந்து அறிவிப்பு வந்தது.
விண்ணப்பித்ததில் அங்கு படிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த பல்கலை விதிப்படி ஆய்வு முறை இரு மொழிகளில் ஆய்வு செய்ய வேண்டும். இந்திய, சர்வதேச மொழி எதுவாகவும் இருக்கலாம். எனக்கு பெரிதும் பழக்கப்பட்ட மலையாளத்தையும், தமிழையும் தேர்வு செய்தேன். நேரடியாக கல்லுாரி சென்று படிக்காத எனக்கு அங்கு சவாலாக இருந்தது. விட்டு விட்டு போய்விடலாமா என்று தோன்றியது. அங்கிருந்த பேராசிரியர்கள் ஆதரவு அளித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையாளம், தமிழ் கலந்து பேசுவர். ஆனால் இப்போது நான் வாசிக்க, எழுத கற்றுக் கொள்ள வேண்டும் என்பதால் என்னென்ன வழிகளில் கற்றுக் கொள்ள முடியுமோ அப்படியெல்லாம் மலையாளம் பயின்றேன். பல்கலை பேராசிரியர்கள் கவிதை, கதை, கட்டுரை கொடுத்து அதைமொழி பெயர்த்து கொடுக்க கூறுவர். அப்படியாக மொழி பெயர்க்க துவங்கி அதன் தொடர்ச்சியில் எனக்கு மலையாளம் வசப்பட்டது.
2019ல் முனைவர் பட்டம் முடித்த கையோடு என் முதல் ஆய்வு புத்தகமான 'மலையாளம், தமிழ் இலக்கிய மொழி பெயர்ப்புகள்' -வெளியிட்டேன். சுஜாதன் எழுதிய 'விவேகானந்தம்' தான் என் முதல் மொழி பெயர்ப்பு புத்தகம். முன்னாள் பாலியல் தொழிலாளி நளினி ஜமீலா எழுதிய 'எண்ட ஆணுங்கள்', 'மலையாளம் மொழி தொல்காப்பியத்தில்' என்ற கோபிநாதன் புத்தகங்களை மொழி பெயர்த்தேன்.
தமிழ், மலையாளத்தையும் ஒப்பிட்டு ஆய்வு கட்டுரைகள் எழுதி வருகிறேன். தமிழில் இருந்து மலையாளத்திற்கு குறுந்தொகையையும், கம்பராமாயணத்தின் யுத்த காண்டமும் மொழி பெயர்த்து வருகிறேன். நான் தமிழில் எழுதிய 3 புத்தகங்கள் வெளி வர உள்ளது.
வெறுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டோரின் வாழ்க்கையை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பது பயங்கரமான மன தைரியம். நளினி ஜமீலா தனது புத்தகத்தில் தான் கடந்து வந்த ஆண்கள் பற்றி கூறுகிறார். எத்தனை விதமான ஆண்கள் என்னென்ன மனநிலைகளில் இருக்கின்றனர் என இந்த புத்தகம் பேசுகிறது. ஜமீலா கூறுகையில், “நான் சந்தித்த ஆண்கள் அனைவரும் மோசமானவர்கள் அல்ல. நான் காதல் கொள்ளக்கூடிய அளவுக்கு என் மீது பாசம் வைத்தவர்களும் உண்டு” என்றார்.
என்னுடைய பேராசிரியர்கள் என்னை எப்படி வளர்த்தார்களோ அதை தான் மொழி பெயர்ப்பில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கும் செய்கிறேன். தவறாக இருந்தாலும் முயற்சி செய்யுங்கள் என்பேன். மனம் தளராமல் செய்யும் போது அதுசிறிது சிறிதாக சாத்தியப்படும்.
ஆசிரியர், மொழி பெயர்ப்பு, ஆய்வு என்ற மூன்று பணியை செய்வது கடினமாக இருந்தாலும் எனக்கு இது பிடித்துள்ளது.
இவ்வாறு கூறினார்.