தொடரும் அரிய வகை குரங்குகள் கடத்தல்: தடுக்க இந்தியா - மலேசியா பேச்சு!

கோலாலம்பூர்: மலேசியாவில் இருந்து வன உயிரினங்கள் இந்தியாவுக்கு கடத்தி வரப்படுவதை தடுப்பது தொடர்பாக, இரு நாடுகளின் புலனாய்வு அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.
தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வன உயிரினங்கள் கடத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது பற்றி சி.பி.ஐ., வன உயிரின குற்ற தடுப்பகம் மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் ஆகியவற்றின் அதிகாரிகள், மலேசியா சென்று அந்நாட்டு அதிகாரிகளை சந்தித்தனர். சர்வதேச அளவில் வன உயிரினங்கள் கடத்தலை தடுக்கும் நோக்கத்துடன் 'இன்டர்போல்' ஏற்பாட்டின் பேரில் இந்த பேச்சு நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில், மலேசியாவில் இருந்து தொடர்ந்து வன உயிரினங்கள் இந்தியாவுக்கு கடத்தி வரப்படுவது அதிகரித்துள்ளது பற்றி அதிகாரிகள் புகார் எழுப்பினர். சென்னை, திருச்சி, பெங்களூரு, மும்பை மட்டுமின்றி, சமீபத்தில் போர்ட் பிளேர், விசாகப்பட்டினம் ஆகிய விமான நிலையங்களிலும் வன உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பறிமுதலான வன உயிரினங்களில், அதிகப்படியாக இருந்தவை, மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட குரங்குகளே. இதற்கு முக்கிய காரணம், மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து பாதுகாப்பு குளறுபடிகளே என்று இந்திய அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.பறிமுதல் செய்யப்பட்ட விலங்குகளை மீண்டும் மலேசியாவுக்கே திருப்பி அனுப்புவது பற்றியும் அதிகாரிகள் விவாதித்தனர்.
ஆனால், மலேசியா அதிகாரிகளோ, 'கடத்தி செல்லப்படும் வன உயிரினங்கள் எங்கள் நாட்டை தாயகமாக கொண்டவை இல்லை. அவற்றை எங்கள் நாட்டில் ஏற்பதில் சிரமம் இருக்கிறது' என்றனர். தாய்லாந்து நாட்டின் வழியாகவும் இத்தகைய வன உயிரினங்கள் சட்ட விரோதமாக கடத்தி வரப்படுவதாக, பேச்சுவார்த்தையின்போது, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியா - மலேசியா அதிகாரிகள் சந்திப்பின் தொடர்ச்சியாக, அந்நாட்டு அமைச்சர் நிக் நாஸ்மி பின் நிக் அகமது, கோலாலம்பூர் விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் பரிசோதனை செய்யப்படுவதை மேற்பார்வையிட்டார். சட்ட விரோதமாக வன உயிரினங்கள் கடத்திச் செல்லப்படுவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அரிய வகை பாம்புகள், யானைத்தந்தம், காண்டா மிருக கொம்புகள் போன்றவற்றை கடத்திச் செல்வதற்கான வழித்தடமாக, சமூக விரோதிகள் மலேசியாவை பயன்படுத்துகின்றனர். அதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும்
-
வெனிசுலா நாட்டை சேர்ந்த 200 பேர்; எல் சால்வடார் நாட்டு சிறைக்கு அனுப்பியது அமெரிக்கா
-
மது கடத்தலை தடுக்க எஸ்.பி., திடீர் சோதனை
-
புதிய கல்விக் கொள்கை வேண்டாம் அமைச்சர் பொன்முடி பேச்சு
-
குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
-
என்.எல்.சி., சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணம்
-
போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்