ஓட்டுனர் கொலையில் மேலும் ஒருவர் கைது

சென்னை:தேனாம்பேட்டையில், 'கால்டாக்சி' ஓட்டுநர் ராஜா கொலை வழக்கில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நீலாங்கரை வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, 41; கால் டாக்சி ஓட்டுநர். அவர், இரு தினங்களுக்கு முன், மகன் ஹரிராஜ் என்பவருடன், தேனாம்பேட்டை பாரதியார் தெரு வழியாக நடந்து சென்றார்.

அப்போது, அந்த வழியாக வந்த, அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி மணிகண்டன்,30 உள்ளிட்ட நான்கு பேர், மகன் கண்முன் ராஜாவை கத்தியால் குத்தி கொலை செய்தனர்.

சம்பவம் தொடர்பாக, தேனாம்பேட்டை போலீசார் கொலை வழக்கு பதிந்து, மணிகண்டன் மற்றும் அவரின் கூட்டாளிகள் என, மூன்று பேரை கைது செய்தனர்.

இந்த கொலை வழக்கில், தேனாம்பேட்டை பருவா நகரைச் சேர்ந்த விஜய் என்ற ஊறுகாய் விஜய், 37 நேற்று கைது செய்யப்பட்டார்.

'தேனாம்பேட்டை பகுதியில், நடைபாதையில் தர்பூசணி கடை நடத்தி வருகிறேன். இதற்கு இடையூறாக இருந்தால், கூட்டாளிகளுடன் சேர்ந்து ராஜாவை கொலை செய்தேன்' என, அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement