அமிர்தசரஸ் கோவில் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியவன் சுட்டுக்கொலை; மற்றொருவன் தப்பியோட்டம்

1

அமிர்தசரஸ்: பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள கோவிலில் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவன் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.

தாகுர்த்வாரா கோவிலில் கடந்த 15ம் தேதி நள்ளிரவு 12:35 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர், கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தின் சிசிடிவி கேமரா பதிவுகள் வெளியாகி உள்ளன. அதில், மோட்டார் சைக்கிளில் கொடியுடன் வந்த இருவர் கோவிலை நோட்டமிட்டனர். பிறகு, பொருள் ஒன்றை உள்ளே வீசி விட்டு தப்பிச் சென்றனர். சிறிது நேரத்தில் கோவிலில் குண்டு வெடித்த காட்சிகள் பதிவாகி இருந்தது.

அப்போது, கோவிலுக்குள் இருந்த அர்ச்சகர் காயமின்றி உயிர் தப்பினார். வேறு யாருக்கும் பாதிப்பு ஏதும் இல்லை. அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அமிர்தசரஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

இந்த நிலையில், கோவில் மீது கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டதாக பஞ்சாப் மாநில டி.ஜி.பி., கவுரவ் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும், மற்றொரு குற்றவாளி தப்பியோடி விட்டதாக கூறினார்.

இது குறித்து அவர் கூறுகையில்,"குற்றவாளிகள் ராஜ சான்சியில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களை கைது செய்ய சென்ற போது, குற்றவாளிகள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், போலீசார் இருவர் படுகாயமடைந்தனர். தற்காப்புக்காக போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர். இதில், ஒரு குற்றவாளி காயமடைந்தான். அவனை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். மற்றொருவன் தப்பியோடினான். அவனை பிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது," இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement