சித்தோடு அருகே சேலம் ரவுடி வெட்டி கொலை கொலையாளிகளை சுட்டுப்பிடித்த போலீஸ்

பவானி:ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே, மனைவியுடன் காரில் சென்ற சேலத்தை சேர்ந்த பிரபல ரவுடியை, மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. கொலையாளிகள் மூவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
சேலம், கிச்சிப்பாளையம் சுந்தர் வீதியை சேர்ந்தவர், ஜான், 30; இவர் மனைவி சரண்யா, 28. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். திருப்பூர், பழைய பஸ் ஸ்டாண்ட் பெரியபாளையம் தில்லை நகரில் ஜான், குடும்பத்துடன் வசித்தார்; டூ--வீலர், நான்கு சக்கர வாகனங்களுக்கு கடன் கொடுக்கும் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.
10 பேர் கும்பல்
போதை பொருள் விற்ற வழக்கில் கைதாகி, நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று, சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஜான், தினமும் கையெழுத்திட்டு வந்தார்.
நேற்று வழக்கம் போல், தன் ஆல்டோ காரில் மனைவி சரண்யாவுடன் போலீஸ் ஸ்டேஷன் சென்று கையெழுத்து போட்டு விட்டு, திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். ஜானை, இரு கார்களில், 10 பேர் கொண்ட கும்பல் பின் தொடர்ந்தது.
ஈரோடு மாவட்டம், முள்ளம்பட்டி பிரிவு அருகே காலை, 11:30 மணிக்கு ஜான் ஓட்டி சென்ற காரின் பின்புறம், ஒரு கார் மோதி நின்றது. இதில் ஜான் காரின் பின்புறம் சேதமடைந்து, கார் கண்ணாடி உடைந்தது.
வாடகை காரில் இருந்து இறங்கிய நால்வர், திடீரென ஜானை, அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் ஜானின் தலை, மார்பு, கழுத்தில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு காரிலேயே துடிதுடித்து பலியானார்.
கொலையை தடுக்க வந்த அவரது மனைவி சரண்யாவுக்கு, கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. அப்போது, கொலை கும்பலை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும், கையில் அரிவாள் வெட்டு விழுந்தது.
ஜான் இறந்ததை உறுதி செய்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. மற்றொரு காரில் பின் தொடர்ந்தவர்களும் தப்பி சென்றனர்.
சம்பவ இடத்துக்கு வந்த, சித்தோடு போலீசார் சரண்யாவை மீட்டு, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். கொலையான ஜானின் உடல், பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கொலை கும்பல், சித்தோடு அருகேயுள்ள கங்காபுரம் மாரியம்மன் கோவில் பகுதியை கடக்க முற்பட்டபோது, அகலம் குறைந்த சாலை என்பதால் காரை ஓட்ட முடியவில்லை. அதிக சத்தத்துடன் ஹாரன் அடித்ததால், அப்பகுதியினர் காரை சுற்றி வளைத்தனர்.
சுற்றி வளைப்பு
இதையடுத்து காரில் இருந்த மூவர் இறங்கி தப்பியோடினர். வெட்டு காயத்துடன் அவதிப்பட்டு வந்ததால், வலி தாங்க முடியாத கார்த்திகேயன், காரில் இருந்து இறங்கி அங்கிருந்த பேக்கரி அருகே சென்று அமர்ந்தார்.
அப்பகுதி மக்கள், அந்த வாடகை டாக்சி காரில் ரத்த கறை இருந்ததால் சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் அங்கு சென்று கார்த்திகேயனிடம் விசாரித்தனர். அப்போது ஜான் கொலை செய்யப்பட்டதும், மூவர் தப்பியதும் தெரிந்தது. இதையடுத்து, சித்தோடு போலீசார் தப்பியோடிய மூவரை தேடினர். ஈரோடு மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
தப்பி ஓடிய மூன்று பேரும், சித்தோடு அருகே பச்சபாளிமேடு என்ற இடத்தில் முட்டுச்சந்தில் சிக்கிக்கொண்டனர். மூவரையும், சித்தோடு இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார், சுற்றி வளைத்தனர்.
அப்போது மூவரும் தங்கள் கையில் இருந்த கத்தியால் இன்ஸ்பெக்டர் ரவி, போலீஸ்காரர் யோகராஜ் ஆகியோரை தாக்கி, ரத்த காயம் ஏற்படுத்தி விட்டு தப்ப முயற்சித்தனர்.
போலீசார் சுதாரித்து உடனடியாக மூவரையும் துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்தனர்.
காயமடைந்த கொலை கும்பலை சேர்ந்த சதீஷ், பூபாலன், சரவணன், கார்த்திகேயன் மற்றும் காயமடைந்த இன்ஸ்பெக்டர் ரவி, போலீஸ்காரர் யோகராஜ் ஆகியோர், பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
பின், கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, அனுப்பி வைக்கப்பட்டனர். சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையில் தொடர்புடைய மேலும் ஆறு பேரை தேடி வருகின்றனர்.
சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ஜான் என்ற ஜான் பிரபல ரவுடி. கடந்த, 2016ல் சூரியன் மகன் நெப்போலியன் கொலை, 2020ல் பிரபல ரவுடி செல்லதுரை கொலை வழக்கு உள்பட வழிப்பறி, அடிதடி, ஆள்கடத்தல், கஞ்சா உள்ளிட்ட, 16 வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கடந்த செப்., 26ல், சேலம் நீதிமன்றத்தில் ஜான் ஆஜரானார். அந்த சமயத்தில், மற்றொரு வழக்கான கஞ்சா வழக்கில் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து இருந்தது. அப்போது காரில் தப்பி செல்ல முயன்ற ஜானை, போலீசார் சுற்றி வளைத்து குண்டுக்கட்டாக துாக்கி கைது செய்தனர்.
மேலும்
-
படகு கவிழ்ந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி; ஒருவரை தேடும் பணி தீவிரம்
-
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பார்வை இழந்த வாலிபருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: ஐகோர்ட்
-
லீவு எடுத்து போராடினால் சம்பளம் கிடையாது: அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலர் உத்தரவு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
தி.மு.க., மாஜி எம்.பி.,யின் பி.ஏ., கொடூர கொலை; நில அபகரிப்பு கும்பலில் மூவர் கைது
-
சென்னையில் விதி மீறி கட்டிய 10 மாடி கட்டடம்; இடித்து அகற்ற சி.எம்.டி.ஏ., முடிவு