'காலையில் பெண்கள் பால் வாங்க போனால் 'கல்ப்ரிட்ஸ்' வர்றாங்க; அதனாலேயே நேர மாற்றம்!'

சென்னை:''அதிகாலை 5:00 மணியில் இருந்து 6:00 மணிக்குள் பால் வாங்கச் சென்றால், 'கல்ப்ரிட்ஸ்' வருகின்றனர். இதனால், பூத்களில் பெண்கள் பால் வாங்கும் நேரம் 6:30 முதல் 7:30 மணியாக மாற்றப்பட்டு உள்ளது,'' என பால்வளத்துறை அமைச்சர் கண்ணப்பன் தெரிவித்தார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
தி.மு.க.,- நந்தகுமார்: அணைக்கட்டு தொகுதியில் அணைக்கட்டு, ஊசூர், ஒடுக்கத்துார் உள்ளிட்ட இடங்களில் பால் குளிரூட்டும் நிலையம் அமைக்க வேண்டும். ஏனெனில், பால் உற்பத்தியாளர்கள் 40 முதல் 50 கி.மீ., பயணித்து, வேலுாருக்கு பாலை எடுத்து செல்ல வேண்டி உள்ளது. நீண்ட துாரம் செல்வதால் பால் கெட்டு போகிறது.
தனியார் நிறுவனங்கள் 10 கி.மீ.,க்கு ஒரு குளிரூட்டும் நிலையம் வைத்துள்ளன. அரசுக்கு பால் வழங்க முன்வரும் விவசாயிகளுக்காக, பால் குளிரூட்டும் நிலையங்கள் அமைத்து தர வேண்டும்.
அமைச்சர் கண்ணப்பன்: ஒடுக்கத்துார் கிராமத்தில், 11 கிளை சங்கங்களில் இருந்து 3,990 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அங்கு, 5,000 லிட்டரை விட கூடுதலாக பால் கிடைத்தால், குளிரூட்டும் மையம் அமைக்கலாம். தனியார், 56 ரூபாய்க்கு பால் விற்கிறது; நாம், 40 ரூபாய்க்கு விற்கிறோம். பால் கொள்முதலுக்கு 3 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதற்காக, 143 கோடி ரூபாயை முதல்வர் கொடுத்துள்ளார்.
பால் வாங்குபவரும் ஏழை; விற்பனை செய்பவரும் ஏழை. அவர்களை கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது.
அத்துடன் நஷ்டம் இல்லாமல், ஆவினை நடத்த வேண்டியுள்ளது. இதற்காக, பிற பொருட்களை விற்கிறோம்; நல்லபடியாக போய் கொண்டு இருக்கிறது. முந்தைய அரசை விட 11 லட்சம் லிட்டர் பால் கூடுதலாக கொள்முதல் செய்யப்படுகிறது. அதனால் தட்டுப்பாடு இல்லை.
பூத்களில் பால் வாங்கும் நேரத்தை மாற்றிக் கொடுத்துள்ளோம். அதிகாலை 5:00 மணி முதல் 6:00 மணிக்கு பெண்கள் பால் வாங்கச் சென்றால், 'கல்ப்ரிட்ஸ்' வருகின்றனர். முகம் தெரியாது. இதனால், காலை 6:30 முதல் 7:30 மணி வரை பால் வழங்குகிறோம்.
பெண்களுக்கு எந்த இடையூறும் கிடையாது. பூத்களுக்கு சென்று பால் வாங்குகின்றனர். எம்.எல்.ஏ., தன் லெட்டர் பேடில் கோரிக்கையை எழுதிக் கொடுத்தால், குளிரூட்டும் நிலையம் அமைத்து தர உதவியாக இருப்பேன்.
இவ்வாறு விவாதம் நடந்தது.








மேலும்
-
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பார்வை இழந்த வாலிபருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: ஐகோர்ட்
-
லீவு எடுத்து போராடினால் சம்பளம் கிடையாது: அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலர் உத்தரவு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
தி.மு.க., மாஜி எம்.பி.,யின் பி.ஏ., கொடூர கொலை; நில அபகரிப்பு கும்பலில் மூவர் கைது
-
சென்னையில் விதி மீறி கட்டிய 10 மாடி கட்டடம்; இடித்து அகற்ற சி.எம்.டி.ஏ., முடிவு
-
நகை விற்பனை ரசீதில் எச்.யூ.ஐ.டி.,எண் இடம் பெற வழக்கு