திருத்தணி முருகன் கோவிலுக்கு யானை * அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
சென்னை,''நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும், திருத்தணி முருகன் கோவிலுக்கு உபயதாரர்களால், யானை வழங்கப்படும்,'' என, ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
தி.மு.க., - சந்திரன்: திருத்தணி தொகுதியில் ஹிந்து அறநிலையத்துறை வாயிலாக அரசு மகளிர் கலை கல்லுாரி துவங்க வேண்டும். முருக பெருமானின் வாகனம் மயில் என்று கூறப்பட்டாலும், அவரது திருமணத்திற்கு வழங்கப்பட்ட ஐராவத யானை, இக்கோவிலின் வாகனமாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. எனவே, திருத்தணி முருகன் கோவிலுக்கு யானை வழங்க அரசு முன்வரவேண்டும்.
ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு: துறை வாயிலாக 10 கல்லுாரிகள் அமைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதை தடுக்கும் வகையில் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது.
பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பின் கொளத்துார், ஒட்டன்சத்திரம், திருச்செங்கோடு, விளாத்திகுளம் ஆகிய தொகுதிகளில் கல்லுாரிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
ஆறு கல்லுாரிகள் துவங்க, நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை தெரிவித்துள்ளது. அதற்கான சூழலை உருவாக்கியபின், திருத்தணிக்கும் கல்லுாரி ஏற்படுத்தி தரப்படும்.
திருத்தணி முருகன் கோவிலுக்கு, 1981ம் ஆண்டு தேவர் பிலிம்ஸ் வாயிலாக ஒரு யானை வழங்கப்பட்டது. அந்த பெண் யானை வள்ளி, 2010ல் இறந்துவிட்டது.
அந்த யானைக்கு கோவிலில் மணிமண்டபம் உள்ளது. வனத்துறை சட்டப்படி யானை வாங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. யானைகளை காட்டில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யக்கூடாது என, 2023ம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவிலுக்கு யாரும் யானை வாங்ககூடாது என, உயர்நீதிமன்ற மதுரை கிளை சுற்றறிக்கை அனுப்பி, அரசு செயலருக்கு உத்தரவிட்டுள்ளது.
கோவிலில் யானைகளின் முக்கியத்துவத்தை, இரண்டு நீதிமன்றங்களிலும் மனுவாக தாக்கல் செய்துள்ளோம். நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும், திருத்தணி கோவிலுக்கு உபயதாரர்களால் யானை வழங்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
***
மேலும்
-
பார்களில் பெண்களுக்கு வேலை; சட்டதிருத்தத்தை கொண்டு வந்தது மே.வங்க அரசு
-
படகு கவிழ்ந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி; ஒருவரை தேடும் பணி தீவிரம்
-
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பார்வை இழந்த வாலிபருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: ஐகோர்ட்
-
லீவு எடுத்து போராடினால் சம்பளம் கிடையாது: அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலர் உத்தரவு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
தி.மு.க., மாஜி எம்.பி.,யின் பி.ஏ., கொடூர கொலை; நில அபகரிப்பு கும்பலில் மூவர் கைது