மாவட்டத்தில் மினி பஸ் இயக்கம் விரிவாக்கம்; 85  புதிய வழித்தடத்துக்கு 900 விண்ணப்பம்


திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், 85 புதிய வழித்தடங்களில் மினி பஸ் இயக்க, 900 விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. நேற்றைய நேர்காணலில், 24 புதிய வழித்தடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

திருப்பூர் மாவட்டத்தில், போதிய பஸ் வசதி இல்லாத பகுதிகளை இணைக்கும் வகையில், 85 புதிய வழித்தடங்களில் மினிபஸ்கள் இயக்க முடிவு செய்து, அரசிதழ் வெளியிடப்பட்டது. திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலக எல்லையில், ரங்கநாதபுரம் - ஜே.ஜே., நகர், குறிஞ்சி நகர் - மருதாசலபுரம் பாலமுருகன் கோவில், கோல்டன் நகர் - திருப்பூர் புது பஸ் ஸ்டாண்ட், தாமரைக்கோவில் - திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட், பெருமாநல்லுார் - புது பஸ் ஸ்டாண்ட், சிவகாமி அவென்யூ - கல்லம்பாளையம் வரை.

அவிநாசி வட்டாரத்தில், கதித்தமலை - குன்னம்பாளையம், குறிச்சிப்புதுார் - பல்லகவுண்டம் பாளையம், தெக்கலுார் - கணியாம்பூண்டி, வளைய பாளையம் - எஸ்.மேட்டுப்பாளையம், குன்னத்துார் - ஒத்தப்பனை மேடு, அவிநாசி புது பஸ்ஸ்டாண்ட் - நெருப்பெரிச்சல், வெள்ளாண்டிபாளையம் - சேவூர் ரவுண்டானா.

திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலக எல்லையில், அண்ணா நகர் - ஜி.என்., கார்டன், ஸ்ரீ கரட்டு பெருமாள் கோவில் - எம்.ஜி.ஆர்., நகர், பூமலுார் - பொன்காளியம்மன் கோவில், பல்லடம் பனப்பாளையம் - திருப்பூர் தினசரி மார்க்கெட் தண்ணீர் தொட்டி, அய்யம்பாளையம் - ராயபுரம், மங்கலம் - ஏ.வி.ஏ.டி., பள்ளி, திருப்பூர் மத்திய பஸ்ஸ்டாண்ட்- முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவில் பிரிவு, பூமலுார் - உழவர் சந்தை, கரடிவாவி - சாமளாபுரம், தில்லை நகர் - விஜயாபுரம், யாஷின் பாபு நகர் - திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் வரை, குறிஞ்சி நகர் - ஸ்ரீ நகர், உப்பிலிபாளையம் பிரிவு - பரமசிவம்பாளையம், வீரபாண்டி பிரிவு - சக்தி அவென்யூ, வீரபாண்டி பிரிவு - வலையபாளையம்.

இதேபோல், திருப்பூர் தெற்கு, காங்கயம் பகுதி அலுவலக எல்லையில், 17 வழித்தடங்கள், உடுமலையில், 22; தாராபுரத்தில், 17 என, மொத்தம் 85 புதிய வழித்தடங்களில் மினி பஸ் இயக்கப்பட உள்ளது.புதிய வழித்தடங்களில் பஸ் இயக்க, மினி பஸ் உரிமையாளர்களிடமிருந்து, அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

மினி பஸ் உரிமையாளர்கள், சேவை கட்டணம் செலுத்தி, புதிய வழித்தடத்தில் பஸ் இயக்க விண்ணப்பித்துள்ளனர்.

மாவட்டம் முழுவதும் 85 வழித்தடங்களில் மினி பஸ் இயக்குவதற்காக, 900 விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. அவர்களுக்கான வழித்தடம் ஒதுக்கீடு செய்யும் பணி தற்போது துவங்கியுள்ளது.

கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று, மினி பஸ்களுக்கு புதிய வழித்தடம் ஒதுக்கீடு செய்ய கூட்டம் நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெங்கிடுசாமி, பழனியப்பன், பாஸ்கர் ஆகியோர், விண்ணப்பங்களை சரிபார்த்து, வழித்தடம் ஒதுக்கீடு செய்தனர்.

நேற்று, மாவட்டம் முழுவதும் மொத்தம் 24 புதிய வழித்தடங்களில் மினி பஸ் இயக்குவதற்கான ஒதுக்கீடு உத்தரவு அளிக்கப்பட்டது. ஒரே வழித்தடம் கேட்டு ஒன்றுக்கும் மேற்பட்ட பஸ் உரிமையாளர்கள் விண்ணப்பித்திருந்தால், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, வழித்தடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

Advertisement