விசைத்தறியாளர் 'ஸ்டிரைக்' தொழிலாளர்கள் பாதிப்பு

அவிநாசி : கூலியை முழுமையாக வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்தத்தை நேற்று துவக்கினர்.

கடந்த, 2022ல், ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்த கூலியிலிருந்து குறைக்கப்பட்ட கூலியை முழுமையாக வழங்குதல், சட்ட பாதுகாப்புடன் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்துதல், ஜவுளி உற்பத்தியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துதல், ஆண்டுக்கு 6 சதவீதம் மின் கட்டணம் உயர்வை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் நேற்று முதல் ஈடுபட்டனர்.

அவிநாசி, நம்பியாம்பாளையம், கருவலுார், புதுப்பாளையம், தெக்கலுார், பெருமாநல்லுார், அன்னுார், சோமனுார் உள்ளிட்ட பகுதிகளில் 60,000 விசைத்தறிகள் நிறுத்தப்பட்டன.

இதனால், தினமும், 30 லட்சம் மீட்டர் உற்பத்தி பாதிப்பும், ஏறத்தாழ, 15 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி இழப்பு ஏற்படும் எனவும் விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்தனர். இந்த ஸ்டிரைக்கால், 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்படைவார்கள் எனவும் விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement