கேள்விக்குறியாகும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நீரோடைக்குள் குப்பை கொட்டி அத்துமீறல்

திருப்பூர்: திருப்பூர் நகரப்பகுதியில் செல்லும் நொய்யல் ஆற்றை புதுப்பித்து, புத்துயிர் அளிக்க, பல்வேறு அமைப்புகளும், மாநகராட்சி நிர்வாகமும் பாடுபட்டு வருகின்றன.

நொய்யல் கரையோரம் அமைத்துள்ள ரோடு வழியாக வந்து, ஆற்றில் குப்பை கொட்டிவிடக்கூடாது என்பதற்காக ஆற்றோரமாக கம்பி வலை அமைத்துள்ளனர்.

இருப்பினும், சிலர் இரவு நேரம் கம்பி வலை ஓரமாக குப்பையை கொட்டி, இயற்கையை சீரழித்து வருகின்றனர். அதுமட்டுமல்ல, சங்கிலிப்பள்ளம் ஓடை, ஜம்மனை பள்ளம் ஓடைகளிலும், குப்பை கொட்டுவது கட்டுக்குள் வரவில்லை; கம்பி வலையையும் சேதப்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக, காங்கயம் ரோடு பாலத்தின் மீது நின்று பார்த்தால், சங்கிலிப்பள்ளம் ஓடைக்குள், அருகே உள்ள நிறுவனத்தினர் குப்பை மற்றும் பனியன் நிறுவன கழிவு களை கொட்டி வைத்துள்ளது, அதிர்ச்சி அளிப்பாக இருக்கிறது.

நீர்நிலைகளை சுத்தமாக பராமரித்து, பாதுகாக்க வேண்டும்; அப்போதுதான், சுகாதாரமான சுற்றுச்சூழலை எதிர்கால சந்ததியினருக்கு வழங்க முடியும் என்று, பசுமை அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.

பசுமை ஆர்வலர்கள் கூறியதாவது:

கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன் பாழடைந்து கிடந்த நொய்யலை மீட்டெடுத்துள்ளோம்; நகரின் மையப்பகுதியில் சரியாக பராமரித்து வருகிறோம்.

இருப்பினும், நடமாட்டம் குறைவான பகுதிகளில், நொய்யலாறு, சங்கிலிப்பள்ளம் மற்றும் ஜம்மனை பள்ளம் ஓடையின் ஓரமாக குப்பை கொட்டுவது அதிகரித்துள்ளது. சுற்றுச்சூழலை உணர்ந்து மக்கள் தாங்களாகவே குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டும்.

ஆனால், திருந்தாத சிலர், நமக்கென்ன, குப்பை வெளியே போனால் சரி, என்ற மனப்பான்மையுடன் நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது.

எனவே, இது விஷயத்தில் மாநகராட்சி நிர்வாகம், கடும் நடவடிக்கை எடுத்தும், அதிகபட்ச அபராதம் விதித்தும் இத்தகைய அத்துமீறலை தடுக்க, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement