நெல் கொள்முதல் நிலையம் களக்காட்டூரில் திறப்பு

காஞ்சிபுரம்:தற்போது நவரை பருவத்தில், காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும் ஐந்து ஒன்றியங்களில், 79,950 ஏக்கர் பரப்பளவில், நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் அறுவடை காலம் துவங்கியுள்ளது.

விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், 95 இடங்களிலும், மத்திய அரசின் தேசிய கூட்டுறவு கூட்டமைப்பு சார்பில், 33 இடங்களிலும், என, 128 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

இவற்றில், காஞ்சிபுரம் அருகே உள்ள களக்காட்டூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் பணியை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்று துவக்கி வைத்தார்.

களக்காட்டூர் மற்றும் குருவிமலை பகுதியிலுள்ள விவசாயிகள் பயிரிடப்பட்டுள்ள 696 ஏக்கர் பரப்பளவு நெற்பயிர்கள் கொள்முதல் செய்ய, இங்கு கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைவார்கள்.

Advertisement