'கிரேட்டர் பெங்களூரு'க்கு எதிர்ப்பு; கவர்னரிடம் பா.ஜ., தலைவர்கள் மனு

பெங்களூரு: 'கிரேட்டர் பெங்களூரு' மசோதா தொடர்பாக கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை, பா.ஜ., தலைவர்கள் சந்தித்து பேசினர்.


பெங்களூரை மாநகராட்சியை 7 ஆக பிரித்து 400 வார்டுகளை உருவாக்கும் நோக்கில், 'கிரேட்டர் பெங்களூரு' திருத்த மசோதா சட்டசபை, மேல்சபையில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. கவர்னரிடம் ஒப்புதல் பெறவும், அரசு தயாராக உள்ளது. ஆனால் மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்க கூடாது என்று, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம், பெங்களூரு குடியிருப்பு சங்கத்தினர் நேற்று முன்தினம் மனு கொடுத்தனர்.


இந்நிலையில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி தலைமையில், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் அஸ்வத் நாராயணா, பைரதி பசவராஜ், விஸ்வநாத், மஞ்சுளா லிம்பாவளி ஆகியோர், கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேற்று சந்தித்து மனு அளித்தனர்.


'கிரேட்டர் பெங்களூரு' மசோதா, 74 வது அரசியலமைப்பு திருத்தத்தை மீறுவதாக உள்ளது. தேர்தல் நடைமுறையை வலுவிழக்க செய்கிறது. அரசு நிர்வாகத்திற்கு இடைஞ்சல் அளிக்கும் வகையில் உள்ளது. பெங்களூரு கலாசாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்பது உட்பட, பல அம்சங்கள் அந்த மனுவில் இடம் பெற்று இருந்தன.


பெங்களூரு மக்கள் நலனை கருத்தில் கொண்டு, 'கிரேட்டர் பெங்களூரு' மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என்று, கவர்னரிடம், பா.ஜ., தலைவர்கள் கேட்டு கொண்டனர்.

Advertisement