ஒரகடம் மேம்பால சாலை சேதம் தொடரும் போக்குவரத்து நெரிசல்

ஸ்ரீபெரும்புதுார்:வாலாஜாபாதில் இருந்து, ஒரகடம், படப்பை வழியாக வண்டலுார் செல்லும், 47 கி.மீ, துார மாநில நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலை வழியாக காஞ்சிபுரம், வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து செல்லும் வாகன ஓட்டிகள் ஒரகடம், படப்பை, வண்டலுார், தாம்பரம் வழியாக சென்னைக்கு சென்று வருகின்றனர்.
மேலும், ஒரகடம் சுற்றியுள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் தொழிற்சாலை பேருந்துகள் இச்சாலை வழியாக செல்கின்றன.
தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் சார்பில், இருவழி பாதையாக இருந்த இச்சாலை, நான்குவழிச் சாலையாக விரிவுபடுத்தப்பட்டது.
இதில், 620 மீட்டர் துாரத்திற்கு ஒரகடம் சந்திப்பில், 22 கோடி ரூபாய் செலவில், 10 ஆண்டுகளுக்கு முன் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது.
வாலாஜாபாத் -- வண்டலுார் இடையே உள்ள நான்குவழிச் சாலையை, ஆறுவழிச் சாலையாக 175.69 கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, ஒரகடம் மேம்பாலம் பலவீனம் அடைந்து, வாகனங்கள் செல்லும் போது அதிர்வு ஏற்படுகிறது. வாலாஜாபாதில் இருந்து, வண்டலுார் மார்க்கமாக செல்லும் மேம்பால சாலையில் கான்கிரீட் உதிர்ந்து விழுகிறது.
இதையடுத்து, ஐ.ஐ.டி., நிறுவன வல்லுநர்களின் உதவியுடன், மேம்பாலத்தை முழுமையாக சீரமைக்கும் பணியினை நெடுஞ்சாலைத் துறையினர் கடந்த மாதம் துவங்கினர்.
மேம்பாலத்தின் மீது ஒட்டை ஏற்பட்ட பகுதி முழுதும், ‛கிரவுன்டிங்' முறையில் பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், படப்பை பஜார் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கம் வகையில், 26.64 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கம் பணி 2022, ஜனவரியில் துவங்கியது.
மூன்று ஆண்டுகளை கடந்து மந்தகதியில் நடந்து வரும் மேம்பால பணிக்காக, தடுப்புகள் அமைக்கப்பட்டதால், சாலையில் குறுகலாக உள்ளது. இதனால், படப்பை வழியே கனரக வாகனங்கள் தடை விதிக்கப்பட்டது.
வாலாஜாபாத்தில் இருந்து வரும் கனரக வாகனங்கள், ஸ்ரீபெரும்புதுார், மணிமங்கலம் வழியாக செல்ல அறிவுறுத்தினர்.
இந்த நிலையில், தடையை மீறி வாலாஜாபாதில் இருந்து ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு, தினமும் ஏராளமான லாரிகள் படப்பை வழியே, வண்டலுார், தாம்பரம், சென்னை சுற்றுவட்டார பகுதிகளுக்கு சென்று வருகின்றன. இதனால், படப்பை பகுதியில் மேலும் நெரிசல் அதிகரித்து, வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஒரகடம் மேம்பாலம் சீரமைக்கும் பணிகள் நடந்து வருவதால், மேம்பாலத்தின் மீது ஒரு வாகனம் மட்டுமே செல்ல வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இரவு நேரங்களில் ஜல்லி கற்களை ஏற்றி வந்த 100க்கும் மேற்பட்ட லாரிகள் மேபாலத்தின் மீதும், மேம்பாலத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் துரத்திற்கு நின்றதால், அப்பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து, வாலாஜாபாத்தில் இருந்து வந்த வாகனங்கள் மேம்பாலத்தின் மீது எதிர் திசையில் செல்ல துவங்கியது. இதனால், வண்டலுார் மார்க்கத்தில் இருந்து வந்த வாகனங்கள், கடும் அவதி அடைந்ததுடன், விபத்து ஏற்படும் அச்சத்தில் சென்றனர்.
எனவே, ஒரகடம் மேம்பாலத்தில் இரவு நேரங்களில் கூடுதல் போலீசார் நியமிப்பதுடன், மேம்பால சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க, நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பார்வை இழந்த வாலிபருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: ஐகோர்ட்
-
லீவு எடுத்து போராடினால் சம்பளம் கிடையாது: அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலர் உத்தரவு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
தி.மு.க., மாஜி எம்.பி.,யின் பி.ஏ., கொடூர கொலை; நில அபகரிப்பு கும்பலில் மூவர் கைது
-
சென்னையில் விதி மீறி கட்டிய 10 மாடி கட்டடம்; இடித்து அகற்ற சி.எம்.டி.ஏ., முடிவு
-
நகை விற்பனை ரசீதில் எச்.யூ.ஐ.டி.,எண் இடம் பெற வழக்கு