தெரு நாய்கள் கடித்து பலியாகும் ஆடு, மாடு, கோழிக்கு அரசு இழப்பீடு சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு

சென்னை:அ.தி.மு.க., - கருப்பணன், பா.ஜ., - வானதி, கொ.ம.தே.க., - ஈஸ்வரன் ஆகியோர், வெறிநாய்களால் மாடு, ஆடு, கோழிகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இவ்விலங்குகளை வளர்த்து பாதிக்கப்பட்டவர்களுக்கு, இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி கூறியதாவது:

சமீப காலங்களாக நாய்கள் கடித்து வெள்ளாடு, செம்மறி ஆடு, பசு, எருமை, கோழி உள்ளிட்டவை உயிரிழக்கும் சம்பவங்கள், அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, இச்சம்பவங்கள் குறித்த விபரங்கள், மாவட்ட கலெக்டர்களிடம் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

அதன் அடிப்படையில், ஊராட்சிகள், பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள கால்நடைகள், ஆடுகள், கோழிகள் உயிரிழக்கும் சம்பவங்களில், உரிய இழப்பீடு வழங்கப்படும். பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள விதிகளின்படி, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, இந்த இழப்பீடு வழங்கப்படும்.

நாய்க்கடித்து உயிரிழக்கும் மாட்டுக்கு, 37,500 ரூபாய்; வெள்ளாடு, செம்மறி ஆட்டுக்கு, 6,000 ரூபாய்; கோழி ஒன்றுக்கு 100 ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும். இதுவரை உயிரிழந்த, 1,149 கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு, 42 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் நேரு கூறுகையில், ''வெறி நாய்களை பிடித்தால், அதை ஊசி போட்டு மீண்டும் பிடித்த இடத்தில் விட வேண்டும் என்பதுதான் சட்டம். உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. நகரப்பகுதிகளில் தெரு நாய்களை கட்டுப்படுத்த ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement