சாலையோரத்தில் மண் அரிப்பு செங்காட்டூரில் விபத்து அபாயம்

பவுஞ்சூர்:பவுஞ்சூர் அருகே செங்காட்டூர் - வீரபோகம் கிராமம் செல்லும் 3.5 கி.மீ., துார தார்ச்சாலை உள்ளது.

இந்த சாலையை செங்காட்டூர், பாக்குவாஞ்சேரி, அனுமந்தபுரம், மருதேரி உள்ளிட்ட 7க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பள்ளி, கல்லுாரி மற்றும் வேலைக்குச் சென்று வர பயன்படுத்துகின்றனர்.

சாலை பழுதடைந்து இருந்ததால், கடந்த ஆண்டு நபார்டு நிதியின் கீழ் ஊரக வளர்ச்சித் துறை சார்பாக, 1.78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டது.

கடந்த பருவமழையின் போது, செங்காட்டூர் ஏரி உபரிநீர் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சாலை ஓரத்தில் இருந்த மண் அடித்துச் செல்லப்பட்டதால், 4 அடி பள்ளம் ஏற்பட்டு உள்ளது.

இதனால், இரண்டு கனரக வாகனங்கள் எதிரெதிரே செல்லும் போது, வாகனங்கள் பள்ளத்தில் கவிழும் அபாயம் உள்ளது.

மேலும், இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.

எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலை ஓரத்தில் மண் அணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement