காட்டுப்பன்றி, மயில் பிரச்னைக்கு மத்திய அரசின் கையில் தான் தீர்வு உள்ளது: அமைச்சர்கள் கருத்து

1

சென்னை: காட்டுப்பன்றி, மயில்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கான தீர்வு, மத்திய அரசிடம் இருப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர்.

சட்டசபையில் நடந்த விவாதம்:
பா.ஜ., - வானதி: தமிழகத்தில் குறிப்பாக, மேற்கு மாவட்டங்களில் காட்டுப்பன்றி, மயில்களால் காய்கறிகள், வாழை போன்ற பயிர்களை பயிரிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.



அமைச்சர் தங்கம் தென்னரசு: காட்டுப்பன்றி, மயில் போன்றவை வன விலங்குகள் பட்டியலில் உள்ளன. எனவே, அவற்றை கொல்ல முடியாது. அவற்றின் பெருக்கத்தை கட்டுப்படுத்த மட்டுமே முடியும். வன விலங்குகள் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தால் தான், இதற்கு தீர்வு கிடைக்கும். அதற்கு வானதி முயற்சித்தால் நல்லது.


வானதி: காட்டுப்பன்றி, மயில்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றே சொன்னேன்; சுட்டுக் கொல்ல சொல்லவில்லை.


அமைச்சர் துரைமுருகன்: சட்டசபையில் காலையிலிருந்து நாய், பன்றி, மயில் என விலங்குகளை பற்றியே பேசிக் கொண்டு இருக்கிறோம்.


அமைச்சர் முத்துசாமி: காட்டுப்பன்றி, மயில்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், மக்கள்தொகையை கட்டுப்படுத்தியதால், தொகுதி மறுவரையறையில் சிக்கலை சந்திக்கிறோம்.


மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்பட்டால் தான் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement