சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்: பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட நடிகர்கள் மீது வழக்கு

14

ஐதராபாத்: சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக பிரபல நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ராணா டகுபதி , விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகைகள் மஞ்சு லட்சுமி, நிதி அகர்வால் உள்ளிட்ட 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாடு முழுவதும் சூதாட்ட செயலிகளில் விளையாடி ஏராளமானோர் பணம் இழந்து வருகின்றனர். அதில், பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனையடுத்து, அத்தகைய செயலிகளுக்கு விளம்பரம் தருவதையும், ஊக்கப்படுத்துவதையும் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு சட்டவிரோத சூதாட்டம் மற்றும் பெட்டிங் செயலிகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு அளிப்போர் மீது நடவடிக்கை எடுக்கும்படி நுகர்வோர் துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது. ஆன்லைன் மூலம் விளம்பரங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது.


இந்நிலையில் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக நடிகர்கள் தெலுங்கு பட நடிகர் ராணா டகுபதி, பிரகாஷ்ராஜ் , விஜய் தேவர கொண்டா, மற்றும் நடிகைகள் நிதி அகர்வால், மஞ்சு லட்சுமி , பிரனிதா, ஸ்ரீமுகி, வர்ஷினி சவுந்தர்ராஜா, வசந்தி கிருஷ்ணன், உள்ளிட்ட 25 பேர் மீது மத்திய அரசின் ஐடி சட்டப்பிரிவு 66டி, பிஎன்எஸ் சட்டப்பிரிவு 318(4), 112, 49 மற்றும் தெலுங்கானா மாநில விளையாட்டு சட்டப்பிரிவு 4 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பனிந்திர சர்மா என்ற தொழிலதிபர் அளித்த புகாரின் அடிப்படையில் சைபராபாத்தின் மியாபூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement