சோற்றில் கை வைக்கிறாங்க! ரேஷன் அரிசி கடத்தல் தீவிரம்: 3 மாதத்தில் 400 சதவீதம் அதிகம்

கோவை,: கோவை மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில், கடந்த மூன்று மாதங்களில், 101 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுவினியோக திட்டத்தில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசியை கோவை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு கடத்தி சென்று சட்ட விரோதமாக விற்பனை செய்வது, தொடர்ந்து நடந்து வருகிறது.

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வேறு மாநிலங்களுக்கு கடத்தப்படும் அரிசியை, பறிமுதல் செய்து, குற்றவாளிகளை பிடிக்க, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார், தீவிரம் காட்டி வருகின்றனர்.

எல்லையில் கண்காணிப்பு



கடந்த சில நாட்களுக்கு முன், தமிழக - கேரள எல்லை வாளையார் பகுதியில், இப்பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த ஒரு மினிலாரி மற்றும் ஆட்டோவை சோதனை செய்தபோது, அதில், நோன்பு கஞ்சிக்கு அரசு வழங்கும் ரேஷன் அரிசி 15 டன் இருந்துள்ளது. இதையடுத்து, அரிசியை கடத்தி வந்த, கோவை சுகுணாபுரத்தை சேர்ந்த பிரோஸ் கான், 35 மற்றும் அய்யப்ப குமார், 41 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் கடந்தாண்டு ஜன., முதல் மார்ச் வரை 26.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. அதில், 141 வழக்குகள் பதியப்பட்டு, 156 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதே இந்தாண்டு ஜன., முதல் தற்போது வரை சுமார் 101 டன் (400 சதவீதம் அதிகம்) ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 227 வழக்குகளில், 236 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

36 பேருக்கு 'குண்டாஸ்'

ரேஷன் அரிசி மற்றும் பொது வினியோக திட்டத்தில் வழங்கப்படும் பொருட்களை, சட்ட விரோதமாக கடத்துவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2024ம் ஆண்டு கோவை மண்டலத்தில் மட்டும், 36 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த ஆண்டை விட பல மடங்கு அதிகமாக கடத்தல் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. அரிசி கடத்தினால் சிறை செல்ல நேரிடும் என்ற எண்ணம் வந்துவிட்டது.

- பாலாஜி சரவணன், எஸ்.பி., குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு.

Advertisement