திருத்தணியில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்து மாணவர்கள் அட்டகாசம்

திருத்தணி:திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து அருங்குளம் வரை டி.45 என்ற அரசு பேருந்து தினசரி இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் காலை மற்றும் மாலை நேரத்தில் திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அதிகளவில் பயணம் செய்கின்றனர்.

இவர்கள் பேருந்தில், படிகள், ஜன்னல்கம்பி மற்றும் கூரையின் மீது ஆபத்தான நிலையில் பயணம் செய்து வருகின்றனர்.

நேற்று காலை, 8:00 மணிக்கு அருங்குளம் பகுதியில் இருந்து திருத்தணி நோக்கி வந்துக் கொண்டிருந்தது. பேருந்தை மத்துார் கிராமத்தைச் சேர்ந்த அகதீஸ்வரன்,47 என்பவர் ஓட்டினார். கிருஷ்ணசமுத்திரம் சேர்ந்த பாபு, 50 என்பவர் நடத்துனராக பணி புரிந்தார்.

பேருந்து ஞானமங்கலம் கண்டிகை பகுதி பேருந்து நிறுத்தத்திற்கு வந்தபோது, அங்கு, 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்தில் ஏறி, படியில் தொங்கியப்படியே பயணம் செய்தனர்.

மாணவர்களிடம் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் படியில் நிற்காமல் உள்ளே வருமாறு அழைத்துள்ளனர். திருத்தணி அரசு மேல்நிலைப் பள்ளி பேருந்து நிறுத்தத்தில் நின்ற போது, மாணவர்கள் திடீரென பேருந்தில் இறங்கி கல்லால் பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement