எதிர்க்கட்சியும் எதிர்க்கருத்துக்களும் மத்திய அரசுக்கு பிரச்னை: கனிமொழி

46

புதுடில்லி: ''எதிர்க்கட்சியும், எதிர்க்கருத்துகளும் மத்திய அரசுக்கு பிரச்னையாக உள்ளது,'' என தி.மு.க., எம்.பி., கனிமொழி கூறினார்.


டில்லியில் நிருபர்களை சந்தித்த கனிமொழி கூறியதாவது: தொகுதி மறுவரையறை குறித்து பேசவோ, விவாதிக்கவோ பார்லிமென்டில் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், இன்று பார்லிமென்ட் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு உள்ளே சென்று கோரிக்கை வைத்தோம்.

ஆனால் முன் எப்போதும் இல்லாத வகையில் எங்கள் உடையில் குறையை கண்டுபிடித்த சபாநாயகர், டீசர்ட் அணிந்து வரக்கூடாது. சட்டையை மாற்றாமல் லோக்சபா நடக்காது என்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சட்டத்தை முன் வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது. லோக்சபா மீண்டும் கூடிய போது நாங்கள் மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் முழுதும் ஒத்தி வைக்கப்பட்டது.

இதற்கு முன்னரும் எதிர்க்கட்சியினர் மாஸ்க் அணிந்து வந்துள்ளனர். அதில் அவர்களின் கருத்துக்கள் வாசகங்களாக இடம்பெற்று இருந்தன. அதேபோல் சால்வை ஆடை அணிந்து வந்துள்ளனர்.

ஆளுங்கட்சியினரும் தங்கள் நம்பிக்கைகளை, கருத்துக்களை சொல்லும் விஷயங்கள் கொண்ட எழுத்துக்களுடன் சால்வை அணிந்து வந்தால் சபாநாயகர் அனுமதிக்கிறார். அவர்களை ஏற்கும் சபாநாயகர் எங்களை மட்டும் வெளியே போகச் சொல்கிறார். எங்களை மட்டும் ஆடைய மாற்றி வர வேண்டும் என உத்தரவிடுவது ஜனநாயகத்திற்கு விரோதமானது. எதிர் கட்சிகளுக்கு விரோதமானது.


அவர்களுக்கு ஆடையும், தொகுதி மறுவரையும் பிரச்சனை இல்லை. எதிர்க்கட்சி இல்லாமல் அவையை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். எதிர்க்கட்சியும் எதிர்க்கருத்துக்களும் மத்திய அரசுக்கு பிரச்சனை. எதிர்க்கட்சிகள் இல்லாத அவையை, வாழ்க வாழ்க என கோஷமிட்டு கொண்டு இருந்தால் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருப்பதாக ஏற்றுக் கொள்வார்கள். அவர்கள் கருத்துக்களுக்கு எதிரான கருத்துகளையும் நம்முடைய கொள்கை சார்ந்த விஷயத்தை முன் வைத்தால் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.


இதனால் பார்லிமென்ட் நடக்கும் நாட்கள் எண்ணிக்கை குறைகிறது. தொகுதி மறு வரையறை பிரச்னை தொடர்ந்து எழுப்புவோம். நாளை மீண்டும் ஆர்ப்பாட்டம் நடக்கும். அவையில் கருத்தை முன்வைக்க வேண்டும் என கேட்போம். இதற்கு அனுமதிப்பார்களா என்பது கேள்விக்குறி நியாயமான தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு உறுதி கொடுக்கும் வரை போராட்டம் நடக்கும். இவ்வாறு கனிமொழி கூறினார்.

Advertisement